Home செய்திகள் தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்..

தென்காசி மாவட்டத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு (19.05.2024 மற்றும் 20.05.2024) சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் (24 X 7) செயல்பட்டு வருகிறது. அவசர கால உதவி மைய எண் 1077 மற்றும் தொலைபேசி 04633-290548 செயல்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஊடகம் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, நீர்வள ஆதாரத் துறை, நகர்புற மற்றும் உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொது சுகாதாரத் துறை, கால்நடை துறை, வேளாண்மைத் மற்றும் தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உட்பட அனைத்து துறைகளும் பேரிடரை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் அவர்கள் பணிபுரிந்து வரும் கிராமங்களிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்படகூடிய தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாக்க மாவட்டம் முழுவதும் 19 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி நிவாரண மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள ஐந்து அணைக்கட்டுகளிலும் நீர் வரத்தினையும் மற்றும் நீர் இருப்பினையும் தொடர்ந்து கண்காணித்து வர நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அணைகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. குளம் மற்றும் ஆறுகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க கரையினை பலப்படுத்துவதற்கும், போதுமான அளவு மணல் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கும் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து அருவிகள், அணைக்கட்டு பகுதிகள் மற்றும் நீர்வரத்து உள்ள ஆற்றுப் பகுதிகளில் பொது மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிக்க காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மணல் சாக்கு மூடைகள், மரம் அறுக்கும் இயந்திரம், JCB, பொக்லைன் மற்றும் இதர மீட்பு உபகரணங்கள் போதுமான அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் இடி,மின்னல் நேரங்களில் மரங்கள், மின் கம்பங்கள் அருகிலோ அல்லது வெட்ட வெளியிலோ நிற்க வேண்டாம். மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைத்தல் கூடாது. பழுதடைந்த ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள், சிலாப்புகளின் அருகில் செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரும் காலங்களில் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க Early Warning System அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகள் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கவும், பாதிக்கப்பட கூடிய இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு தயார் நிலையில் இருக்கவும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தலைமையிடத்திலிருந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் மூலம் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கையினை எதிர்கொள்ள மேற்கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com