
“தமிழ் பண்பாடு, தொல்லியல், மானுடவியல் நோக்கில் பேராசிரியர் தொ.பரமசிவன்”என்ற தலைப்பில் மாநில அளவிலான முழு நாள் கருத்தரங்கம் நெல்லையில் நாளை ( 23-ஆம் தேதி) நடக்க இருப்பதாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார். இது குறித்து பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளதாவது:நெல்லை அரசு அருங்காட்சியகமும், பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சி நாளை சனிக் கிழமையன்று காலை 10.00 மணியளவில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை வகிக்கிறார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா வரவேற்புரை வழங்குகிறார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் கா. பிச்சுமணி,பேராசிரியர் தொ.பரமசிவன் திரு உருவப்படத்தை திறந்து வைத்து, தொடக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெறுகிறது.முதல் அமர்வுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் கணிதப் பேராசிரியர் முனைவர் சுப.சோமசுந்தரம் தலைமை வகிக்கிறார். இதில் “நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் தொ.ப.”என்னும் தலைப்பில் எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கருத்துரை வழங்குகிறார். இரண்டாவது அமர்வுக்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் மேனாள் நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் பேராசிரியர் நா.இராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். இதில் “தமிழ்ப் பண்பாட்டியல் நோக்கில் தொ.ப.”என்னும் தலைப்பில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கலைப்புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் கருத்துரை வழங்குகிறார். மூன்றாவது அமர்வில் முனைவர் பட்ட ஆய்வாளர் திருக்குறள் இரா.முருகன் தலைமையில் மதுரை தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் “தொல்லியல் ஆய்வு நோக்கில் தொ.ப.”என்னும் தலைப்பில் பேசுகிறார். மாலை 4.30 மணியளவில் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் சான்றிதழ்களை வழங்கி, கருத்தரங்க நிறைவுரை ஆற்றுகிறார். கலையாசிரியர் க.சொர்ணம் நன்றி கூறுகிறார். கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான கவிஞர் பேரா ஆகியோர் செய்து வருவதாக கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.