நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் இயற்கை நுண் உர செயலாக்க மையம்..

நெல்லையில் சிறப்பான செயல்பாடுகளுடன் இயற்கை நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது.நெல்லை மாநகராட்சியில் தினசரி சுமார் 110 டன் மக்கும் குப்பைகள் உருவாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் ராமயன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கில் மொத்தமாக குவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை மூலம் நுண் உரம் செயலாக்க மையம் அமைக்க திருநெல்வேலி மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன்படி தற்போது திருநெல்வேலி மாநகராட்சியில் 41 இடங்களில் நுண் உரம் செயலாக்க மையம் ஆரம்பிக்கப்பட்டது. வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட நுண் உர செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.மக்கும் குப்பைகள் அனைத்தும் துகள்களாக அரைக்கப்பட்டு சிமெண்ட் தொட்டிகளில் கொட்டப்படுகிறது. பின்னர் அதன் மேல் நொதிக்க வைக்கப்பட்ட தயிர் கரைசல் தினமும் தெளிக்கப்பட்டு 22 நாட்களில் உருவாக்கப்படுகிறது.

குறிப்பாக பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நுண் உர செயலாக்க மையங்களில் ,உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவித்து நுண் உர மையங்களில் உருவாகும் இயற்கை உரத்தின் மூலமாக காய்கறி தோட்டங்கள் குறிப்பாக வெண்டைக்காய், கத்தரிக்காய்,பீட்ரூட், முள்ளங்கி,தக்காளி, காலிபிளவர், வாழைமரம்,பப்பாளி, முருங்கை மரம் போன்றவை இயற்கை உரங்கள் மூலமாக விவசாயம் செய்யப்படுகிறது.இந்தப் பணிகளை சுகாதார அலுவலர் அசோக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மேற்பார்வையாளர் முருகன் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு காலனியில் உள்ள நுண் உரம் மையத்தில் உருவாகும் இயற்கை உரங்கள் மூலமாக கரும்பு 6 அடி முதல் 10 அடி உயரம் வரை வளர செய்துள்ளனர்.

நுண் உரம் மையத்தில் உள்ள உரத்தை போட்டதால் 25 சதவீதம் கூடுதலாக மகசூல் கொடுத்துள்ளது. இது குறித்து வேலவர் காலனி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில், திருநெல்வேலி மாநகராட்சி மூலமாக நுண் உரம் செயலாக்க மையம் அமைவதாக அறிந்த போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம், குடியிருப்பு பகுதிகளில் நடுவில் நுண் உர செயலாக்க மையம் இயங்குவதால் துர்நாற்றம் வீசும் என்று நினைத்தோம். கடந்த ஒரு வருட காலமாக இந்த நுண் உர மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.முன்பெல்லாம் வீடு வீடாக உருவாகும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் கொட்டி வந்தோம். இந்த மையம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு எங்கள் பகுதியில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் மூலமாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வைப்பதற்காக பல கூட்டங்கள் மாநகராட்சி மூலமாக நடைபெற்றது, இதன் காரணமாக 100% எங்கள் பகுதியில் குப்பைகளை பிரித்து வழங்குகிறோம்.திருநெல்வேலி மாநகராட்சியில் தான் முதன் முதலாக இயற்கை முறையில் உருவான உரங்கள் மூலமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிரிடப்பட்டு தற்போது வளர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வாழை, பப்பாளி, காளான் வளர்ப்பு போன்றவை பணியாளர் மூலமாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்று கூறினார்.தற்போது எல்லா மாநகராட்சிக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தினாலும் கூட நெல்லை மாநகராட்சிக்கு தான் இதன் முன்னோடி என்று உயர் அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் இயற்கை உரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே தற்போது விஜயநாராயணம் கப்பல் படைத்தளம், தோட்டக்கலைத் துறையினர் கூட மாநகராட்சியின் இயற்கை உரத்தை வாங்கி செல்கின்றனர். திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் கண்ணன் பொறுப்பேற்ற பிறகு நுண் உர செயலாக்க மையங்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்