Home செய்திகள் மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..

மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..

by Askar

மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..

மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி சென்ற 19 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை மூலம் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அறவழியில் அமைதியான முறையில் மனு அளிக்க சென்ற விவசாயிகள் பெருமளவில் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை ஏவி கைது செய்வதென்பதுகொடுங்கோன்மையாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3174 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை தமிழ்நாடு அரசின் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு மாதத்திற்கும் மேலாக அறவழியில் போராடி வந்த விவசாயிகளைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திமுக அரசு கைது செய்து சிறையிலடைத்தது. மேலும், போராடிய அப்பாவி விவசாயிகளில் எழுவர் மீது சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு குண்டர் சட்டத்தையும் தொடுத்து வதைத்தது. தற்போது தங்களது தாய்நிலத்தைத் தற்காக்க அமைதியான முறையில் தலைமைச்செயலகத்தை நோக்கி மனு அளிக்க சென்ற விவசாயிகளையும் கைது செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

மக்களாட்சி தேசத்தில் அறவழியில் போராடுவதும், அமைதி வழியில் மனு அளிப்பதும் அரசியலைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளாகும். அதனைக்கூட அனுமதிக்க மறுப்பதென்பது பெருங்கொடுமையாகும். டெல்லியில் வாழ்வாதார உரிமைகள் கேட்டு போராடும் விவசாயிகளைச் சொந்த நாட்டு குடிமக்கள் என்றும் பாராமல் ரப்பர் குண்டுகள் மூலம் துளைத்து அறவழிப்போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் பாசிச பாஜக அரசினை நோக்கி யார் தீவிரவாதிகள் உழவர்களா? அரசாங்கமா? என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தம்மிடம் மனு அளிக்க வந்த விவசாயிகளைச் சந்திக்கக்கூட அனுமதி மறுத்து, அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ளது ஏன்? இப்போது தீவிரவாதிகள் யார்? திமுக அரசா? அல்லது மேல்மா விவசாயிகளா? இதற்கு பெயர்தான் உரிமைகள் மீட்க குரல் கொடுக்கும் திராவிட மாடலா? விளைநிலங்களை அழித்துவிட்டு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தருவதால் விளையும் பயன் என்ன? வெற்றுத்தாள்களில் விதைகள் முளைக்காது; எந்த எந்திர தொழிற்சாலையும் உணவை உற்பத்தி செய்யாது என்ற உண்மையை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உணரப்போவது எப்போது?

ஆகவே, திமுக அரசு அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகார அடக்குமுறையை கட்டவிழ்க்கும் கொடுங்கோன்மை போக்கினை இனியேனும் கைவிட வேண்டுமெனவும், மேல்மா வேளாண் பெருங்குடிமக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து விளைநிலங்கள் கையகப்படுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் மேல்மா விவசாயிகளோடு இணைத்து மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!