Home செய்திகள் செய்யாறு சிப்காட் விரிவாக்கம்: முதல்வரிடம் மனு அளிக்க வந்த 19 பெண்கள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..

செய்யாறு சிப்காட் விரிவாக்கம்: முதல்வரிடம் மனு அளிக்க வந்த 19 பெண்கள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..

by Askar

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரி வாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் 225 நாட்களுக்கும் மேலாக அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாயிகள் விளைநிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஜனநாயக அறவழியில் தொடர்ச்சியாக அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பதற்காக, சென்னை தலைமைச் செயலகம் நோக்கி வந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தை சேர்ந்த 19 பெண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளது. வாக்களித்து தேர்வு செய்த முதல்வரை சந்தித்து முறையிட வந்தவர்களை, பெண்கள் என்றும் பாராமல் கைது செய்தது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு கண்டனங்களுக்கு பிறகே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது அடக்கு முறையின் உச்சமாகும். வடமாநிலங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர்  டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு அடக்கு முறையை கையாண்டு வருவது போன்று, இங்கே தலைநகர் சென்னையில் உள்ள முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்த பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் மீது தமிழக காவல்துறையின் மூலம் திமுக அரசு அடக்கு முறையை ஏவி வருகின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், “விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்”  தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சியமைத்த பிறகு அதற்கு நேர்மாறான வகையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சியில் விளைநிலங்களை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல்கொடுத்து விட்டு, தற்போது பரந்தூர் விமான நிலையம், செய்யாறு சிப்காட் விரிவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக விவசாய விளை நிலங்களை பறிக்கும் இரட்டை நிலை ஏற்புடையதல்ல. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து உரையாற்றிய தமிழக முதல்வர் அவர்கள், “திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது” என பெருமிதம் கொண்டார். ஆனால் உண்மையில் இந்த அரசு அவ்வாறு நடந்துகொள்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. முதல்வரின் வார்த்தைகளில் இருந்து சொல்வதென்றால், “பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் திமுக அரசு உள்ளது. ஆகவே, செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்து, விவசாயத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com