தமிழ்நாட்டில் நடப்பது தமிழ் மொழிக்கான பொற்கால ஆட்சி; உலகத் தாய்மொழி தின விழாவில் கவிஞர் பேரா பேச்சு..
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தமிழ் மொழிக்கான பொற்கால ஆட்சி என நெல்லையில் நடந்த உலகத் தாய்மொழி தின விழாவில் கவிஞர் பேரா பேசினார். பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தூய இஞ்ஞாசியார் கல்வியில் கல்லூரி சார்பாக உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடந்தது. கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முதல்வர் முனைவர் வசந்தி மேடோனா தலைமை வகித்தார். மாணவி சோலை அழகு மீனாட்சி வரவேற்புரை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தொடக்க உரை ஆற்றி, விழாவைத் தொடங்கி வைத்தார். அவரது தொடக்கவுரையில், “தாய் மொழியைக் காப்பதற்காக யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டும் தாய்மொழி நாடாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. யுனெஸ்கோ 1999-ல் அறிவித்த அந்த அறிவிப்பின் படி 2000 ஆண்டிலிருந்து உலகின் பல நாடுகளும் தாய்மொழி நாளை கொண்டாடி வருகின்றன. தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்ப்பால் போன்றது. ஒரு மொழி அழியும்போது பண்பாடு மட்டுமல்ல ஒரு இனமே அழிகிறது. எனவே இனத்தையும் பண்பாட்டையும் காத்திட வேண்டும் என்றால் தாய்மொழியை காப்பாற்றிட வேண்டும்.
அந்த வகையில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகவே தமிழ் வளர்ச்சித் துறை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறை தமிழ் வளர்ச்சிக்காக பல எண்ணற்ற திட்டங்களையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. பல விருதுகளை வழங்கி மொழிக்கு வளர்ச்சிக்குப் பணியாற்றி வரும் சான்றோர்களுக்கு பல விருதுகளையும் வழங்கி வருகிறது. 2024-2025-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் பண்டைய தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க ரூபாய் இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் அறுநூறு நூல்கள் உருவாக்கப்பட்டு, உலகின் பல பல்கலைக் கழகங்களிலும் நூலகங்களிலும் வைத்திட நடவடிக்கை எடுத்திடும் அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழர் பண்பாடு காத்திட கீழடி உட்பட இன்னும் எட்டு இடங்களில் அகழாய்வு செய்திட ரூபாய் ஏட்டு கோடி ஒதுக்கீடும், சிந்துச் சமவெளி நாகரிக நூற்றாண்டுக் கருத்தரங்கம் சென்னையில் நடத்திடும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இப்படி, மொழி வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் ஒரு தனித் துறை இயங்கவில்லை. அந்தப் பெருமையும் தமிழ்நாட்டிற்கே உள்ளது. இப்போது நடப்பது மொழிக்கான பொற்கால ஆட்சியே எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குநர் முனைவர் சொர்ணலதா, மருத்துவர் ச.இராஜேஸ்வரி ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள். நூலகர் முனைவர் ஜான்சி ரோஸ், முனைவர் மரகதமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உலகத் தாய்மொழி நாள் விழாவுக்காக நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் தூய தமிழில் பேசும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 74 வயதில் முனைவர் பட்டம் பெற்ற இரா. முருகன் பொதிகைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகளால் பாராட்டப்பட்டார். நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் பா. இராமகிருஷ்ணன், கவிஞர் முத்துக்குமார், தூத்துக்குடி லட்சுமணன் உட்பட கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மாணவி முகமது செய்யது நஸ்ரிபானு நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.