டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ரேவதி ரயில்வே ஊழியராவார்

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை மாத இறுதியில் ஜப்பான் டோக்கியோ நகரில் துவங்குகிறது. ஒலிம்பிக் 400 மீட்டர் தடகள தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க மதுரை ரயில்வே ஊழியர் ரேவதி வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த ரேவதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் வணிக மற்றும் பயணச்சீட்டு எழுத்தராக பணியில் சேர்ந்தார். இவர் தற்போது கூடல்நகர் ரயில்வே சரக்கு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இவரை வளர்த்து ஆளாக்கிய இவளது பாட்டி ஆரம்மாளும், மதுரை மாவட்ட தடகளப் பயிற்சியாளர் கே.கண்ணனும் இவரது தடகள பயிற்சிக்கு உறுதுணையாக இருந்துனர். இவருடன் தடகள தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள ஆரோக்கியராசு தனலட்சுமி சேகர், நாகநாதன் பாண்டி, சுதா வெங்கடேசன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேரும் தமிழ்நாட்டிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த மாநிலத்திலும் 5 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.இவர்களைப் பாராட்டி தமிழக அரசு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசு அளித்துள்ளது. ஒலிம்பிக் தடகள தொடர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற வீராங்கணை ரேவதி வீரமணியை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள ரேவதி வீரமணி குறித்து அவரது பாட்டி வீரம்மாள் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக என்னிடம் ஆர்வத்துடன் கேட்டார். நான் ஓடும் பொழுது கீழே விழுந்தால் அடிபட்டு விடும் எனவே வேண்டாம் என தடுத்து விட்டேன். ஆனாலும் அவர் என்னை விடவில்லை தொடர்ந்து நான் ஓடுகிறேன் என்று ஓடி சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டார், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத இயலாத நிலையில் நான் மிகுந்த கஷ்டப்பட்டு எனது பேத்தியை கல்லூரி படிப்பை முடிக்க வைத்தேன். இந்த நிலையில் தன்னுடைய ஓட்டத்திற்கான பயணத்தை அவர் விடவில்லை பயிற்சியாளர் கண்ணன் இவரது திறமையை பார்த்து ஓட்டப்பந்தயத்திற்காண செலவுகள் அனைத்தையும் நானே பொறுப்பு ஏற்கிறேன். என கூறி அவரை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் ஓட்டப்பந்தய பயிற்சி அளித்தார். பயிற்சியாளர் கண்ணன் உதவியால் எனது பேத்தி இன்று ஒலிம்பிக்கில் விளையாடும் அளவிற்கு வளர்ந்துள்ளார் அதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் கண்ணன். குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்துசிறப்பாக ஓடி எங்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.ரேவதியின் தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு இறந்தார் அவரைத் தொடர்ந்து எட்டு மாதங்களில் ரேவதியின் தாயும் மூளைக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். எனவே இவர்களை சிறுகுழந்தைகள் இருந்து நானே எனது சொந்த உழைப்பில் கூலி வேலை செய்து வளர்த்து வந்தேன். இந்த நிலையில் தான் தினமும் காலை மாலை இருவேளையும் பயிற்சி மேற்கொண்டார் பயிற்சியின் போது காலில் செருப்பு இல்லாமல் ஓடினார் அதனை கண்ட பயிற்சியாளர் கண்ணன் அவருக்கு காலணி வாங்கி கொடுத்து தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சியில் ஈடுபட்டு நான் களைப்புடன் இருக்கும்பொழுது ஒருநாள் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று உங்களுக்கு பேரும் புகழும் பெற்றுத் தருவேன் அடிக்கடி கூறி வருவார். அவர் ஒரு நாள் இந்தியாவிற்கே ஒரு நற்பெயரை பெற்றுத் தருவார் என நம்பிக்கை உள்ளது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..