Home செய்திகள் 21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே!-சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்…

21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே!-சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்…

by Askar

21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே!-சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍..

பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே, கோவிட்19 என்கிற மிக பயங்கரமான தொற்றுநோய் பரவியுள்ள சூழ்நிலையில், தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கொ‌ரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப்படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

ஏழையிலும் ஏழையான பலவீனத்திலும் பலவீனமான மனிதர்களின் முகத்தை ஒரு கணம் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல், அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல், அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவிதமான அவசர உதவியையும் அறிவிக்காமல் உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.

உங்களது உரையில், இத்தகைய நாடு தழுவிய முடக்கத்தால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட போகிற, குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வேலை தேடி வந்த கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வுக்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் நீங்கள் அளிக்கவில்லை. அவர்கள் உணவையோ அல்லது 21 நாட்கள் தங்குவதற்கான இடத்தையோ உறுதி செய்யாமல் அதை பெறுவதற்காக அல்லது எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் திணறி இன்று இரவு முதல் செய்வதறியாது கையறு நிலையில் நிற்கப் போகிறார்கள். அவர்கள் எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடைவார்கள்? அவர்கள் எப்படி இருபத்தொரு நாட்கள் பணமில்லாமல் அல்லது உணவுப் பொருட்கள் இல்லாமல் அல்லது காவல்துறையின் அராஜகத்தை எதிர்கொள்ளாமல் உயிர் வாழ்வார்கள் என்று நம்புகிறீர்கள்?

அவர்கள் பாதுகாப்புக்காக ஓடத் துவங்கி இருக்கிறார்கள். யாரேனும் துரத்துவார்களோ, பிடித்து விடுவார்களோ, அடித்து விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அவர்கள் ஓடத் துவங்கி இருக்கிறார்கள். அனேகமாக நள்ளிரவு முதல் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு விடும். அவர்கள் தங்களது அடிப்படையான தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்வதற்கு வாய்ப்போ அல்லது பணமோ அல்லது எந்த விதமான உதவியும் அளிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 21 நாள் முடக்கம் காரணமாக எல்லோருடைய வேலையும் பறிபோக இருக்கிறது. ஏற்கனவே துயரத்தின் உச்சத்தில் சிக்கியுள்ள அவர்களது வாழ்க்கை எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வே துயரின் பிடியில் சிக்கியிருக்கிறது. அவர்களது கூலிக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் நோய் பதற்றம் ஏற்பட்டு இருக்கிற நிலையில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் விடப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுகிற சமூக தனிமைப்படுத்தல் என்பதன் அடிப்படையான நோக்கத்திற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எல்லாம் அமைந்துள்ளன. மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்த்து நாம் போராட வேண்டிய தருணத்தில், பொருத்தமற்ற இந்த அறிவிப்புகளை செய்திருக்கிறீர்கள்.

உங்களது உரையில் சுகாதார நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினீர்கள். அது எங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடிக்கடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருப்பவர். அடிக்கடி பொருளாதாரத்தில் உச்ச கட்டத்தை எட்ட போவதாக பேசிக் கொண்டிருப்பவர். ஆனால் வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே உங்களால் ஒதுக்க முடிந்திருக்கிறது. இந்தத் தொகை எந்த அளவிற்கு மிக மிக குறைவானது தெரியுமா?

ஒரு குடிமகனுக்கு வெறும் 112 ரூபாயைத் தான் நீங்கள் ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால் மிகப்பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கு நீங்கள் எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் தெரியுமா? அவர்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக என்ற பெயரில் கிட்டத்தட்ட 7.78 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறீர்கள்.

இன்னும் சொல்வதானால் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை மட்டும் அளித்து இருக்கிறீர்கள்

ஆனால் மிக மிக பயங்கரமான ஆபத்தான நோய் சூழலில் சிக்கியிருக்கிற நமது மக்களின் சுகாதாரத்திற்காக உண்மையில் இதைவிட மிக அதிகமாக அல்லவா செலவழித்து இருக்க வேண்டும்?

ஏன் நீங்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு மிகப் பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்து அந்த பணத்தை கையகப்படுத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூட நாம் எச்சரிக்கப்பட்டோம். உலக அளவில் கொரோனா பாதிப்பு என்பது தீவிரமாகப் போகிறது என்பது கண் முன்னால் தெரிந்தது. ஆனாலும் கூட உங்களது அரசாங்கம் தேசிய சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாகவே குறைத்தது. குறிப்பாக நாட்டின் மிக முக்கிய பெரிய மருத்துவ மனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டன. தில்லியில் இருக்கிற மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட வெறும் 0.1 சதவீதம் அளவிற்குத்தான் சற்று கூடுதல் நிதியை பெற முடிந்தது.

இன்னும் குறிப்பாக ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீம யோஜனா என்ற தேசிய சுகாதார திட்டத்திற்கு பொது நிதி ஒதுக்கீடு 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது போல 6,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியாயமாக அது அதிகரிக்கப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிதி ஒதுக்கீடு என்பது 360 கோடி ரூபாயிலிருந்து 283. 71கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

இன்னும் அதிர்ச்சிகரமான முறையில், எளிதில் தொற்றக்கூடிய எளிதில் கண்டறிய கூடிய நோய்களுக்கான சுகாதாரம் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் அதிகரிக்கப்படாமல் 2178 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது.

உண்மையைச் சொல்வதானால் உங்களது அரசாங்கம் இந்தியாவின் சுகாதார செலவினங்கள் மீது கிரிமினல் தனமான வெட்டுக்களை கடுமையான முறையில் அரங்கேற்றியது. இது இன்றைக்கு இந்தியாவை மிகப் பெரும் ஆபத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

உலக அளவில் கொரோனா நோய் பரவத் துவங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் இந்தியாவுக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதற்கான கருவிகளைக் கூட குறைந்த விலையில் நாடு முழுவதும் சப்ளை செய்ய முடியவில்லை. பரிசோதனை கருவிகள் மட்டுமல்ல, அதற்கான நடைமுறைகள் அல்லது முக கவசம் மற்றும் வெண்டிலேட்டர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தைக் கூட அரசு உணர்ந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். மார்ச் 24ஆம் தேதி வரையிலும் இத்தகைய மிக முக்கியமான கருவிகள் நமக்கு தேவை என்பதைக் கூட உணராமல், அவை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட நிறுத்தாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காமல் உங்களது அரசாங்கம் அலட்சியம் செய்து இருக்கிறது என்பது மிகமிக அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும்.

உங்களது உரையில் மாநில அரசுகள் முழுக்க முழுக்க சுகாதார நடவடிக்கைகளில் மட்டுமே அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறீர்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பதற்றமான தருணத்தில் உங்களது கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதையெல்லாம் மறந்து, மத்தியப் பிரதேசத்தில் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்து, கவிழ்த்து இருக்கிற ஒரு வேலையைத்தான் செய்து கொண்டிருந்தது. இந்தியாவின் நாடாளுமன்றமும், நீங்கள் என்ன தேவை என்று கருதுகிறார்களோ அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் மறுபுறத்தில் கேரளாவில் ஆட்சி நடத்தும் இடது ஜனநாயக அரசாங்கமும் நாட்டில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் வேறுசில மாநிலங்களும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை செய்திருக்கின்றன. குறிப்பாக பாதித்தவர்களை பரிசோதிப்பது, அவர்களோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனைக்கு உள்ளாக்குவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, அதற்கு மிக அதிகபட்சமான முக்கியத்துவம் தருவது என்கிற முறையில் மட்டும் அல்லாமல், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உரிய பொருத்தமான பொருளாதார உதவிகளை அறிவித்திருப்பது என்ற முறையில் மிகச் சிறந்த பணியாற்றி இருக்கின்றன. இவை எதையும் நீங்கள் குறிப்பிடவும் அங்கீகரிக்கவும் செய்யவில்லை. அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை, அவர்களது உணர்வுப்பூர்வமான பங்களிப்பை, அவர்களது சக்தியை, அவர்களது நிர்வாகத் திறமையை நீங்கள் ஒரு துளி அளவு கூட அங்கீகரிக்கவில்லை.

இந்த மிக மிகக் கடினமான தருணத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டிய கடமையில் இருக்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் மிகத்தெளிவான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இந்த கடுமையான தருணத்தில் இருபத்தொரு நாட்கள் நாடே மூடப்படுகிற சூழலில் பொருளாதார உதவிகளைப் பற்றியும் அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கான சோதனை, பொது சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைகள் ஆகிய இரண்டு முனைகளிலும் நீங்கள் சரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இரண்டுமே மிக முக்கியமானவை.

இவையிரண்டும் தாமதப்படுத்தாமல் செய்யப்பட்டால் தான் மிகப் பெரும் கொள்ளை நோயை நாம் தோற்கடிக்க முடியும்.

கொரோனா நோய்க்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தில் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

ஆனால் உங்களது அரசாங்கம் அனைத்தையுமே குடிமக்கள் பக்கம் தள்ளி விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, குடிமக்களை அனைத்து துன்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எந்தவிதமான உறுதி மொழியையும் அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

எனவே நமது மக்கள் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் உங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

சீத்தாராம் யெச்சூரி பொதுச்செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com