Home செய்திகள் தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி..

தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி..

by ஆசிரியர்

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பப்பட உள்ள ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் செப்டம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டோவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது. அதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆதித்யா எல் 1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி பணியாற்றியுள்ளார்.

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பவர் நிகர்ஷாஜி. இவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான், சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகளான நிகர் சுல்தான். இவரது தற்போதைய பெயர் நிகர்ஷாஜி. தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதேபோல், 12-ஆம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். பின்னர் நிகர் சாஜி, 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்துள்ளார். பிர்லா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்து இஸ்ரோவில் இணைந்தார் நிகர் சாஜி. தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் நிகர் சாஜியின் கணவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். ஆதித்யா எல் 1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குனராக பணிபுரிந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும், தென்காசி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் நிகர் ஷாஜி.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com