Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -9

( கி.பி.1299-1922)

அன்றைய வாடிகன்நகரில் இருந்த கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் ஐந்தாவது அர்பன் அவர்களிடம் உதவி கேட்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன.

போப்பிடம் ஆலோசனையையும், உதவிகளையும், பால்கன் நாடுகளின் அரசர்கள் கேட்டனர்.

போப் ஐரோப்பிய நாடுகளின் எல்லா மன்னர்களும் ஒன்றிணைந்து உஸ்மானிய படைகளை எதிர்க்க கடிதம் எழுதினார். சிலுவைப்போரை துவக்க கடிதம் எழுதினார்.

இருப்பினும் உஸ்மானிய படைகளின் அதிவேக பரவல்களை, முன்னேற்றங்களை, பால்கன் படைகளால் தடுக்க முடியவில்லை.

பல நாடுகளை வெற்றிகொண்ட உஸ்மானிய படைகள் பால்கன் நாடுகளை உஸ்மானிய அரசிற்கு கப்பம் கட்ட பணித்தன.

உஸ்மானிய அரசின் நிலப்பரப்பு உர்கான் ஆட்சியில் இருந்ததைவிட முராத்தின் ஆட்சியில் ஐந்து மடங்கு அதிகமாகி இருந்தது.

முராத் இவ்வளவு விரிந்த நிலப்பரப்பின் பேரரசராக இருந்தாலும், அரண்மனைகள் போன்ற பெரிய அரசமாளிகைகள் இருந்தாலும்,

முராத் அவர்களின் வாழ்க்கை முறை மிக எளிமையாக இருந்தது. போரில் தனக்கு கிடைத்த செல்வங்களை ஏழைகளுக்கு பிரித்து வழங்கினார்.

முராத் அவர்களின் மகன் சாருஜி பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். தோல்வியடைந்த பால்கன் அரசர்கள் சாருஜியை தந்தை முராத்திற்கு எதிராக தூண்டினார்கள்.

உங்கள் தந்தையைவிட நாட்டை ஆள உங்களுக்கு தகுதி இருக்கிறது.ஆகவே தனியாக படை திரட்டி உங்கள் தந்தையை கொன்று அரசை கைப்பற்றுங்கள். பின்புலமாக நாங்கள் உதவி செய்கிறோம் என்று சாருஜிக்கு ஆசையை தூண்டிவிட,

சாருஜி தனி படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். இதனையறிந்த மன்னர் முராத் நேரடியாக சிறுபடையுடன் வந்தபோது சாருஜியுடன் இருந்த வீரர்கள் மன்னரை நேரடியாக பார்த்ததும் மன்னிப்பு கேட்டு மன்னரோடு இணைந்து கொண்டார்கள்.

சாருஜி தனிமைப் படுத்தப்பட்டார். உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக தனது மகன் என்றும் பாராமல் சாருஜிக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது.

பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பிகளை இரண்டு கண்களிலும் சொருகி இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டது.

துருக்கியின் காண்ஸ்டாண்டி நோபிள் மன்னர்தான் இந்த சதியை தூண்டினார் என்பதை அறிந்த மன்னர் முராத் அதன் மீது படையெடுக்க ஆயத்தமானார்.

அதனை அறிந்து கொண்ட காண்ஸ்டாண்டி நோபுள் மன்னர் தனது மகன் தான் சதியை தூண்டினார் என்று குற்றம் சாட்டி தனது மகனின் இரண்டு கண்களையும் குருடாக்கினார்.

இதனால் சமாதானமடைந்த மன்னர் முராத் காண்ஸ்டாண்டி நோபுள் படையெடுப்பை நிறுத்தி வைத்தார்.

முராத் பல ஐரோப்பிய இளவரசிகளை திருமணம் செய்து கொண்டார்.

முராத்தின் ஆட்சி நிம்மதியாகவும் அமைதியாகவும் இருந்தது. ஆகவே மக்கள் முராத்தின் ஆட்சியை மிகவும் நேசித்தார்கள். பிற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களும், யூதர்களும், முராத்தின் ஆட்சியை நேசித்தார்கள்.

ஏராளமான யூதர்கள் உஸ்மானிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கொத்து கொத்தாக குடியேறினர்.

அதற்கான காரணம் என்ன?

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com