Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-7

(கி.பி 750-1258)

அன்றைய அரசர்கள் பல காரணங்களால் பல திருமணங்களை செய்தனர்.

பாதுஷா ஹாரூன் அர்ரஷீத் அவர்கள் முதல் மனைவியாக‌ ஒரு அரேபிய பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.

இரண்டாவது மனைவியாக ஒரு பாரசீக பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.

இதுபோன்ற பல திருமணங்களுக்கு பலமான அரசியல் காரணங்களும் இருந்தன.

பேரரசர் தனது இறுதி காலத்தில் தனது மூன்று மகன்களையும் வாரிசுகளாக நியமித்துவிட்டு மரணமடைந்தார்.

அதில் முதல் மனைவியான அரேபிய பெண்ணிற்கு மகனாக பிறந்தவர் அமீன் அவர்கள்.

இரண்டாவது மனைவியான பாரசீகப் பெண்ணிற்கு பிறந்தவர் அல் மாஃமூன் ஆவார்.

அடுத்த மன்னர்களை தேர்ந்தெடுப்பதில் பிரச்சினைகள் வந்து பேரரசு சிதையக்கூடாது என்பதாலேயே தனது செல்வாக்குள்ள மூன்று‌மகன்களையும் அடுத்தடுத்த அரசர்களாக நியமித்து அதனை உத்திரவாக கஃபா ஆலயத்தில் தொங்கவிடச் செய்தார்.

அதன்படி மன்னராக அமீன் பொறுப்பேற்றார். இருப்பினும் தனது முழு படைகளையும் தனது திறமையான மகன் அல்-மாஃமூனிடமே ஒப்படைக்க தலைமை ஆலோசகர் பத்லு இப்னு ராபிஆ அவர்களுக்கு மன்னர் ஹாரூன் அர்ரஷீத் உத்திரவிட்டு இருந்தார்.

அல்-மஃமூனின் தலைமை ஆலோசகராக பத்லு இப்னு சஹல் என்பவர் இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை பிடிக்காது.

ஆகவே மன்னர் ஹாரூன் அர்ரஷீத் அவர்களின் உத்தரவுப்படி, பத்லுஇப்னு ராபிஆ அவர்கள் படைகளை மஃமூனிடம் ஒப்படைக்காமல் அமீனை ஆதரித்தார்.

ஒருகட்டத்தில் அமீனை ஓரம் கட்டிவிட்டு தனது மகனை மன்னராக நியமிக்க பத்லுஇப்னு ராபீஆ முயற்சித்தார். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அல் மாஃமூன் அவர்கள் படைகளை திரட்டி தனது சகோதரர் அமீனுக்கு எதிராக போர்தொடுத்தார்.

மஃமூனின் தளபதி தாஹிர் இப்னு ஹுசைன் அவர்களின் அதிரடித்தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்த அமீன் இறுதியில் கொல்லப்பட்டார்.

பதவிகளுக்காக‌ சகோதரர் சண்டைகள் எல்லா பேரரசுகளிலும் நடந்தது.

அரசு,பதவி, அரண்மனை, அந்தப்புறம், அழகான பெண்கள்,ஆடம்பரம் போன்ற சொகுசுகள் நியாயங்களை புறக்கணித்து சண்டையிட்டாவது ஆட்சியை கைப்பற்ற தூண்டியது.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஆட்சிப் பொறுப்பேற்றால் அவர்களின் வாரிசுகள் ஆட்சியை தொடர முடியும் என்ற ஆசைகளும் மன்னர்களை தூண்டியது.

ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த அமீனின் ஆட்சியில் குறிப்பிடத்தக்க‌ நிகழ்வுகள் ஏதுமில்லை.

மன்னராக அல்-மஃமூன் பதவி ஏற்றார். அல்- மஃமூன் பதவி ஏற்றபோது மெர்வ் நகரமே விழாக்கோலமாக இருந்தது.

பாரசீக பெண்ணின் மகனான அல் மஃமூன் அவர்கள் பாரசீகப்பகுதியான மெர்வ் நகரை மிகவும் நேசித்தார்.

மெர்வ் நகரம் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தலைநகரப் போல மெர்வ் நகரின் கட்டிடங்களும், சாலைகளும், நீருற்றுக்களும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

மன்னர் அல் மஃமூன் பதவியேற்ற தினத்தில் மெர்வ் நகர மக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

பாரசீகப்பெண்ணின் மகனான பிறந்த அல் மாஃமூன் அவர்களுக்கு பாரசீக தளபதிகளின் ஆதரவு அதிகம் இருந்ததால் படை மிக வலுவாக இருந்தது.

அல்-மஃமூன் சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும் இவர் முஃதஸிலா கொள்கையை ஆதரித்தார். இது மக்களிடையே அதிருப்தியையும், குழப்பங்களையும், ஏற்படுத்தியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com