Home செய்திகள் மும்பைக்கு மரண பயத்தை காட்டிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..

மும்பைக்கு மரண பயத்தை காட்டிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..

by Askar

மும்பைக்கு மரண பயத்தை காட்டிய ஹைதராபாத்; 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..


17வது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 8வது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் ஹென்றிச் க்ளாசன் 80 ரன்களும், அபிஷேக் சர்மா 63 ரன்களும், டிராவிஸ் ஹெட் 62 ரன்களும் குவித்திருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா மட்டும் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

இமாலய இலக்கை நோக்கி களம்
அதன் பின்னர் 278 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோரைப் பார்த்தபோது அதனை மும்பை இந்தியன்ஸ் அணியால் சேஸ் செய்ய முடியுமா அல்லது இந்த இலக்கை நெருங்குமா என்ற கேள்வி வர்ணனையாளர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரது மத்தியிலும் இருந்தது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மாவுக்கு இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200வது போட்டியில் விளையாடினார். இருவரும் அதிரடியாகவே ஆட்டத்தை தொடங்கினர். குறிப்பாக சிக்ஸர்களை மாறி மாறி விளாசினர். இதனால் மும்பை அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 13 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். அதையடுத்து ரோகித் சர்மா ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்தில் தனது விக்கெட்டினை 12 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் இணைந்த திலக் வர்மா மற்றும் நமன் தீர் கூட்டணி, ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து சவால் அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. திலக் வர்மா மைதனாத்தில் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்கள் விளாசி வந்தார். அதேநேரத்தில் நமன் தீர் 200 ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். இவர்கள் கூட்டணியினால் மும்பை இந்தியன்ஸ் அணி 10.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்தது. அடுத்த பந்தில் நமன் திர் தனது விக்கெட்டினை 30 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.

வெற்றி பெற்ற ஹைதராபாத்
அதன் பின்னர் களத்திற்கு வந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவுடன் இணைந்து மும்பை அணி இலக்கை எட்ட போராட்டமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை அணி வெற்றி பெற 6 ஓவர்களில் 96 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அதன் பின்னர் ஆட்டம் மெல்ல மெல்ல ஹைதராபாத் அணியின் கட்டுக்குள் வந்தது.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!