இந்திய அளவிலான வளர்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் 2ம் இடம் நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் பாராட்டு..

இராமநாதபுரம் மாவட்டம் நித்தி ஆயோக் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ராமேஸ்வரத்தில் நடந்தது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகம் அருகே பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடத்தில் பி.என்.பணிக்கர் பவுண்டேஷன் கேரளா, குடிமை சமூகப்பணி கூட்டமைப்பு, இந்தியா மற்றும் குடிமை சமூகப்பணி கூட்டமைப்பு தமிழ்நாடு ஆகியவை ஒருங்கிணைந்து நடத்திய வளர்ச்சியை  எதிர்நோக்கும் மாவட்டங்களுக்கான மேம்பாட்டு திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று தொடக்கி வைத்தார். நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் ராகேஷ்ரஞ்சன்  கலந்து கொண்டு திட்ட விளக்கவுரையாற்றினார்.

இக்கருத்தரங்கினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மத்திய அரசு இந்திய அளவில் வளர்ச்சியை எதிர்நோக்கும் மாவட்டங்களாக மொத்தம் 117 மாவட்டங்களை  தேர்வு செய்து, அம்மாவட்டங்களில் சுகாதார மேம்பாடு, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு, கல்வி வளர்ச்சி, தொழில்திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை அடிப்படை காரணிகளாகக் கொண்டு மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்களை சிறப்பாக  செயல்படுத்திடும் வகையில் தர நிர்ணயம் செய்து கண்காணித்து வருகிறது. மக்களின் வாழ்க்கைத்  தரத்தினையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் அக்டோபர்-2018 வரை தர நிர்ணயத்தின்படி நமது இராமநாதபுரம் மாவட்டமானது இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 117 மாவட்டங்களில் 2-ம் இடத்தில் உள்ளது.  இதற்கு மாவட்ட மக்களின் ஒத்துழைப்பும், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய அரசுத்துறை அலுவலர்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். தமிழகஅரசு மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஊக்கும் வகையில்  அரசு மானியத்துடன் பல்வேறு கடனுதவிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் கடல்பாசி தயாரித்தல், பனை ஓலைகளை பயன்படுத்தி பல்வேறு  உபயோகப் பொருட்கள் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முருங்கை,முண்டு மிளகாய் போன்ற பயிர்களை வளர்த்து அதனை மதிப்புக்கூட்டு செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிக லாபம் பெறலாம். வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பில் மக்கள் பங்களிப்போடு மாவட்டம் முழுமைக்கும் ஒரு லட்சம் முருங்கை மரக்கன்றுகள் நடப்படும். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள பி.என்.பணிக்கர் பவுண்டேஷன் குழுவினர்  முருங்கை மரம் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்களை மதிப்புக்கூட்டு செய்து சந்தைப்படுத்த  தயாராகவுள்ளனர். இந்த வாய்ப்பை மகளிர் சுய உதவிக் குழுவினர், வேளாண் மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

நித்தி ஆயோக் முதன்மை ஆலோசகர் ராகேஷ் ரஞ்சன் பேசியதாவது: மத்திய அரசு திட்டத்தின் கீழ் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 2018 அக்டோபர் வரை தர நிர்ணயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் இந்திய  அளவில் 2-வது இடத்திலுள்ளது பாராட்டுக்குரியது. மக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களின் செயல்பாட்டின் மூலம் இதனை முதன்மை மாவட்டமாக உயர்த்த வேண்டும். இராமநாதபுரம் மாவட்டமானது குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய வறட்சி மாவட்டம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க மத்திய, மாநில  அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின்  வளமான வாழ்விற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த ஏதுவாக தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின்பயன்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதித்து அறிவித்துள்ளது. இது மிகவும் பாராட்டக்கூடிய வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். பொதுமக்கள் இந்த தடை அறிவிப்பை முழுமையாக  பின்பற்ற வேண்டும் என பேசினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், நித்தி ஆயோக்  முதன்மை ஆலோசகர் ராகேஷ் ரஞ்சன் ஆகியோர் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கைபார்வையிட்டனர். ஆந்திரப்பிரதேசம் அரசு அறிவியல் நகரம் திட்ட துணைத்தலைவர்  கிருஷ்ணாராவ் அப்பசானி, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமலினி, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், பி.என்.பணிக்கர் பவுண்டேஷன் துணைத்தலைவர் என்.பாலகோபால், வேளாண் வல்லுநர் கமலாசனன் பிள்ளை, மத்திய அரசு புள்ளியியல் அதிகாரி டாக்டர் விக்னேஷ் சொர்ணமோகன், பொது இ-சேவை மையங்களின் மாநில தலைமை அலுவலர் வினோத்குறியகோஸ்,ஊர் பிரதிநிதி நான்சி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.