Home செய்திகள் மதுரையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பற்றி எரிந்த கார், சரக்கு வாகனம் : முன் பகையால் மதுரையில் அரங்கேறும் அட்டூழியம் – போலீஸ் குவிப்பு..!

மதுரையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பற்றி எரிந்த கார், சரக்கு வாகனம் : முன் பகையால் மதுரையில் அரங்கேறும் அட்டூழியம் – போலீஸ் குவிப்பு..!

by ஆசிரியர்

மதுரையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் உறவினர்கள் வீடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஜூன் மாதம் நடந்தபோது கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு பொன்னம்பலத்தின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு பொன்னம்பலத்தின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3பேர் மற்றும் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேர் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பொன்னம்பலத்தின் தரப்பினர் ஜாமினில் வெளிவந்த நிலையில் வேல்முருகன் தரப்பினருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கருவனூர் கிராமத்தில் இன்று இரவு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் உறவினர்களான பிரபு மற்றும் வேலுமணி ஆகியோரின் வீடுகள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு லாரிகள் மீது மர்ம நபர்கள் திடீரென இரவில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக வாகனங்களில் தீ மள மள பரவத் தொடங்கியது. இதில் கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை முழுமையாக எரிந்த நிலையில் மற்றொரு கார் மீதும் லேசாக தீ பரவி சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் முழுவதும் கார் மற்றும் சரக்கு வாகனம் எரிந்தது இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கருவனூர் கிராமத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மோதல்கள் கார் எரிப்பு சம்பவங்கள் நீடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது கருவனூர் கிராமத்தில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com