இராமநாதபுரத்தில் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் அமைப்பினர் அமைத்த குடிநீர் தொட்டி அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

இராமநாதபுத்தில் 26 வது வார்டு அமைந்திருக்கும் வண்டிக்காரத் தெருவானது, நகரின் மிக முக்கிய கடைவீதி தெருவாகும். இங்கு தான் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் வீடு உள்ளது.

இந்த வார்டு பகுதியில் கழிவு நீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என தொடர்ந்து தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளுக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் இங்கிருக்கும் இளைஞர்கள் ஒன்று கூடி “மாற்றம் முன்னேற்றம் வி 26” இளைஞர் பொது நல சங்கத்தை ஆரம்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் குடிநீர் தட்டுபாட்டில் தத்தளிக்கும் தெரு மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இளைஞர் சங்கத்தினர் முடிவு செய்து கட்டணம் ஏதும் இல்லாமல் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இப்பகுதியில் ஒரு சின்டேக்‌ஷ் டேங்க் அமைத்து அதன் மூலம் தண்ணீர் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்து திறப்பு விழா நடைபெற்று பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக காரணம் காட்டி காவல் துறையினர் குடிநீர் தொட்டியை அகற்றினர்.

இதனால் கட்சி சார்பின்றி தன்னார்வமாக இளைஞர்கள் பொதுமக்களுக்கு நற்பணிகள் செய்வதை தடுப்பதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதே வேளையில் எதிர்புறம் அமைச்சர் மணிகண்டன் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். இளைஞர்களின் தன்னலமற்ற சேவைகளை வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை தடுக்காமலாவது இருக்கலாம் என்பது இப்பகுதி பொதுமக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..