பல லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை ரோலரை விட்டு நொறுக்கி அழித்த ஆந்திர போலீசார்-வைரல் வீடியோ…

ஆந்திராவில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரோடு ரோலரை வைத்து போலீசார் அழித்த காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் வாகன தணிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 14,189 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த மதுபாட்டில்களை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அழிக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 14189 மதுபாட்டிகளை வரிசையாக அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லுசில்லாக நொறுக்கினர்.

இந்த காட்சியை பார்க்க அந்த பகுதி மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில்களை உடைக்கும் போது தீவிபத்து ஏற்படலாம் என கருதப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

ஊரடங்கு நேரத்தில் ஆந்திராவில் உள்ள 10 காவல் நிலையங்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்