இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்துவதற்காக, விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக பெங்களூரிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதற்கட்டமாக கடந்த 07.07.2018 அன்று 3,310 மின்னணு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 12.08.2018 அன்று 1,800 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் வரப்பெற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டது. கடந்த 03.10.2018 முதல் 10.10.2018 வரை அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்த்தல் நடத்தப்பட்டது. அதனடிப்படி 3,295 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 1,771 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,729 வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்களின் செயல்பாடு சரியாக இருந்தது. முதல்நிலை சரிபார்த்தலில் சரியாக செயல்படாத இயந்திரங்கள் பெங்களூரிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு மீள் அனுப்பப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் பணிகளுக்காக கூடுதலாக 300 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 600 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலிருந்து இன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரப்பெற்றன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.எஸ்.எஸ்.கண்ணபிரான், உதவி ஆணையர் கலால் ச.ரவிச்சந்திரன், தேர்தல் வட்டாட்சியர் திரு.கே.முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.