இராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை கால புதிய குடிநீர் திட்டப்பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வலியுறுத்தல்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்குத் போதிய அளவு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், அரசு முதன்மை செயலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவன தலைவர், மேலாண் இயக்குநருமான பி.சந்திரமோகன் ஆய்வு  செய்தார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார். அரசின் முதன்மை செயலர் சந்திர மோகன் கூறியதாவது: தமிழக அரசு எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில்  கோடை காலத்தில் தேவைப்படும் குடிநீர் அளவை உத்தேசமாக கணக்கிட்டு, போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்வதற்கு பயன்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்களை தயார் நிலையில் வைக்கவும், தேவைக்கேற்ப புதிய குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இன்றைய நிலவரப்படி 37 எம்எல்டி அளவு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் கிராமங்களுக்கு 32.57 எம்எல்டிஅளவு தண்ணீரும், பேரூராட்சி நிர்வாகம் மூலம் 7 பேரூராட்சிகளில் 4 எம்எல்டி அளவு தண்ணீர் அந்தந்த ஊர்களில் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. புதிய குடிநீர் திட்டப்பணிகளை பொறுத்தவரை 2018-19 நிதியாண்டில் இதுவரை நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1.51 கோடி மதிப்பில் 66 குடிநீர் திட்டப்பணிகள், ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.12.19 கோடி மதிப்பில் 437 குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.13.70 கோடி மதிப்பில் 503 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.80.20 லட்சம் மதிப்பில் 64 பணிகள், பேரூராட்சிகளின் மூலம் ரூ.52 லட்சம் மதிப்பில் 4 பணிகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.11.58 கோடி மதிப்பில் 304 பணிகள் என ரூ.12.90 கோடி மதிப்பில் 372 புதிய குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. புதிதாக துவங்கவுள்ள  இப்பணிகளுக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்டு ஒப்பந்தப்புள்ளி கூடுதல், நிர்வாக அனுமதி வழங்குதல் போன்ற நடைமுறைகளை உரிய முறையில் மேற்கொண்டு பணிகளை உடனடியாக துவங்கி மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என  தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.