Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கமுதி அருகே பேரையூரில் பயனாளிகளுக்கு பல லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்..

கமுதி அருகே பேரையூரில் பயனாளிகளுக்கு பல லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் கிராமத்தில் இன்று (27.02.2019) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பாக 101 பயனாளிகளுக்கு ரூ.30.04 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் வழங்கினார். அவர் பேசியதாவது: மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையிலான அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முகாமில் அரசு செயல்படுத்தப்படும் அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முகாம்களில் முதியோர் உதவித்தொகை வேண்டி அதிக அளவிலான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சராசரியாக 74 ஆயிரம் பயனாளிகள் பல்வேறு விதமான உதவித்தொகையாக ரூ.1 ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர். கமுதி மற்றும் முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரும்பாலும்  விவசாயம் முக்கிய தொழிலாக கொண்டு வருகின்றனர். நெல், மிளகாய், சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுப்பண்ணைய திட்டத்தில் முதுகுளத்தூர் பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து அரசு மானிய நிதியுதவியுடன் விவசாயிகள் சிறுதானிய உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நவீன வேளாண் இயந்திரங்களை தாங்களே கொள்முதல் செய்து பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக 5 ஏக்கர் வரை விளை நில நேரடி பட்டாதாரர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும், பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக 75,534 தகுதியான பயனாளிகளுக்கு முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுகிறது. மத்திய அரசின் இத்திட்டத்தில் விடுபட்ட தகுதியான பயனாளிகளை சேர்ப்பதற்கு 25.02.2019 முதல்  27.02.2019 வரை சிறப்பு முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசு 01.01.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கான தடை விதிப்பிற்கு மக்களிடம் அதிக வரவேற்புள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான இயற்கை சூழலுக்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்வது அவசியமாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. 10 ஆயிரம் பேர் பனை சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். பனை பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக்கிற்கு மாற்று உபயோகப் பொருட்களை தயாரிக்கலாம். புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு நீட்ஸ் திட்டம், மத்திய அரசின் பிரதம மந்திரி வேலை உருவாக்கும் திட்டம், முத்ரா கடனுதவி திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சி.பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் திருஞானம், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுகி பிரமிளா உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com