
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடந்த 11.9.2020-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கொரோனா பெருந்தொற்று நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மக்கள் கூடுவதற்கு மத்திய மாநில அரசுகள் விதித்த வழிகாட்டுதலின் படியும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 குவிமுச பிரகாரம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுபாடுகளை பலர் விதிமீறலில் ஈடுபட்டனர். அவ்வாறு விதிமீறலில் ஈடுபட்டவர்களை வீடியோ கேமரா மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்ததில், 140 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள், 13 அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் 6 கிராமங்களை சேர்ந்தவர்கள் விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. கட்டுப்பாடுகளை மீறி விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்டம் முழுவதும் 132 வழக்குகள் இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இதில், இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் இருவருக்கும் தலா ரூ.11,500 அபராதம் விதிக்கப்பட்டு தண்டனையில் முடிவடைந்துள்ளது. இதுபோன்று நீதிமன்ற நிலுவையில் உள்ள 87 வழக்குகளையும் தண்டனையில் முடிக்க சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புலன் விசாரணையில் இருந்து வரும் 43 வழக்குகளின் மீதான புலன் விசாரணையை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. பதிவு செய்யப்பட்ட மேற்படி விதிமீறல் வழக்குகளில் இதுவரை 163 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து நபர்களையும் கைது செய்ய பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர 410 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை விதிக்கப்பட்ட வழித்தடத்தில் அத்துமீறி சென்ற வழக்கில் மானாமதுரையை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் எமனேஸ்வரம் அருகில் உள்ள நாகநாதபுரத்தை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு வழக்குகளிலும் சிலரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும், சிலரை நிலைய பிணையில் விடுவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளின் மீதான புலன் விசாரணையை விரைவில் முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் மதித்து ஒத்துழைக்க வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கேட்டுக்கொண்டுள்ளார். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
You must be logged in to post a comment.