Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தேர்தல் விதியை மீறி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.ம.மு.க..

தேர்தல் விதியை மீறி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அ.ம.மு.க..

by ஆசிரியர்

பொள்ளாச்சி  சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனங்களை  தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியிலும் கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இந்நிலையில் தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள அ.ம.மு.க., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முயன்றனர். ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போலீஸார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்க மறுத்தனர். இதனால், கட்சியினருக்கும் போலீஸாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.  கலைந்து செல்வது போலக் கலைந்த தொண்டர்கள் அருகில் உள்ள பழைய மாநகரட்சி அலுவலக வளாகத்திற்குச் செல்வது போல, திடீரெனக் கூடி ஆர்ப்பாட்டத்திற்கான பேனரை கையில் ஏந்தியபடி பேரணியாகவே வந்தனர். தடையை மீறி பேரணியாக வந்தது மட்டுமல்லாமல், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சர்ச்சையில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் 2 பேரையும் கைது செய்யவேண்டும். அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாவட்ட எஸ்.பி.,பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்பது உட்பட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி, “பொள்ளாச்சியில் அப்பாவிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. வீடியோக்களில் மாணவிகள் கதறும் காட்சி நெஞ்சைப் பிளக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரும் தப்பிவிடக்கூடாது. அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். இந்தச் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் 2 பேரையும் கைது செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக எஸ்.பி., பாண்டியராஜனின் செயல்பாடுகள் அதிக  சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. தமிழகக் காவல்துறை ஸ்காட்லாந்து நாட்டுக் காவல்துறைக்கு இணையானது. தமிழகக் காவல்துறை முறையாக விசாரித்தாலே வேறு எந்த சி.பி.ஐ. விசாரணையும் தேவையில்லை. இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.., மீது மக்கள் வைத்துள்ள கடும் அதிருப்தியால் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., அரசு வீட்டுக்குப் போவது உறுதி.” என்றார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com