இராமநாதபுரத்தில் வங்கி பண பரிவர்த்தனை கண்காணிப்பு அனைத்து வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ..

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிபரிவர்த்தனைகள் குறித்து முறையே கண்காணிப்பதற்காக அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்துää இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் 12 பறக்கும்படை குழுக்கள்,12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 8 மணி நேர சுழற்சி முறையில் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வங்கிககள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகளை கண்காணிப்பது அவசியமாகும். 1 லட்சம் ரூபாய்க்கு மேலாக குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலோ, பணம் செலுத்தப்பட்டாலோ மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து சீரான முறையில் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவது குறித்தும் கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், வேட்பாளர்களை சார்ந்தோர் ஆகியோரது வங்கி கணக்குகளை முறையே கண்காணித்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.

இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளை தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அறிக்கையாகவும் சமர்ப்பித்திட வேண்டும். அந்த வகையில் முறைகேடான பண பரிவர்த்தனைகளை 100 சதவீதம் தவிர்க்கும் விதமாக அனைத்து வங்கியாளர்களும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட முன்னோடி வங்கி  அலுவலர் கார்த்திகேயன் உட்பட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.