கீழக்கரையில் உள்ளூர் ‘வரலாற்று சுற்றுலா’ – அல் பையினா பள்ளி மாணவர்களுடன் வரலாற்று ஆரய்ச்சியாளர்கள் பங்கேற்பு

வரலாறு தெரியாதவர்கள் ; வரலாறு படைக்க மாட்டார்கள்’ என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் இன்று நம்முடைய தொன்மையான சரித்திரமும், மூதாதையர் வழி வரலாறும் முறையாக தெரியாததன் விளைவாக நம்முடைய பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய விழுமங்கள், விருந்தோம்பல், சமத்துவ நட்புறவு சித்தாந்தம், ஆதி தொழில், பொருளாதாரம், உள்ளூர் பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு மொழி, ஆரோக்கியம், மருத்துவ முறை, சத்தான உணவு முறை, முத்தான உறவு முறை, பண்டைய உள்ளூர் விளையாட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய விஷயங்கள் எல்லாம் காலப் போக்கில் மறைய துவங்கி விட்டது.

இந்நிலையில் ”கீழக்கரையில் தொன்மை வரலாற்றினை சிறுவயதிலேயே நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் அனைவரும் தான் பிறந்த மண்ணின் வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும்” என்கிற வேண்டுகோளை கீழக்கரை வரலாற்று ஆய்வாளர், தஞ்சை தொல்லியல் கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர். ‘கல்வெட்டு களஞ்சியம்’ ஆனா. மூனா. சுல்தான் கல்வியாளர்களுக்கு வைத்திருந்தார்.

இதனையடுத்து கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாபிர் சுலைமான், அல் பையினா பள்ளி சார்பாக பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று சுற்றுலாவினை இன்று (22.03.2018) ஏற்பாடு செய்திருந்தார். இந்த சுற்றுலா நிகழ்விற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆனா மூனா சுல்தான் தலைமையேற்று கீழக்கரை சரித்திர சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இச்சுற்றுலாவில் கலந்து கொண்ட கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர் அபு சாலிஹ் தொன்மையான நம் கீழக்கரை வரலாறுகளை அழகுற மாணவர்களுக்கு விளக்கினார்.

இன்றைய வரலாற்று சுற்றுலாவில் கீழக்கரை கடற்கரை பள்ளிவாசல், பழைய குத்பா பள்ளிவாசல், புனித அந்தோனியார் சர்ச், வள்ளல் சீதக்காதியின் வசந்த மாளிகை உள்ளிட்ட கீழக்கரை நகரின் வரலாற்று தொன்மைமிக்க இடங்களை அல் பையினா பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கீழை மாநகரின் வரலாறுகளை தெளிவான நயத்துடன் மாணவர்களுக்கு விளக்கினர்.

இந்த வரலாற்று சுற்றுலா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புகளை அல் பையினா கல்வி குழுமத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்பாக செய்திருந்தார். வரலாற்று சுற்றுலா நிகழ்வின் ஏற்பாடுகளை பள்ளியின் விளையாட்டுத் துறை ஆசிரியர் நதீர் சாகுல் ஹமீது முன்னின்று வழி நடத்தினார். இது போன்ற வரலாற்று சுற்றுலாக்கள் மூலம் கீழக்கரை நகரின் அழகிய பாரம்பரியமும், முன்னோர்களின் போற்றுதலுக்குரிய நடைமுறை கலாச்சாரங்களும் இந்த தலைமுறையினருக்கும் மட்டுமல்லாமல் நமது அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப்பட்டு வரலாறு நிலை நிறுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

dig

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

  1. கீழக்கரையில் இருக்கும் பள்ளிகளில் அல் பைய்யினா பள்ளி சரியான பாதையில் செல்கிறது என்பதை பலமுறை நிரூபிக்கிறார்கள். இப்பள்ளியில் ஏட்டுக்கல்வியைக்காட்டிலும் செய்முறை மற்றும் செயல்முறை கல்வியை அதிகம கற்பிக்கப்படுகிறதுபோலும், இதுவே தரமென்று அப்பள்ளிப்பிள்ளைகளும் அறியும். இதுபோன்று கல்வியை மற்ற பள்ளிகளும் பிள்ளைகளுக்கு கற்பிக்க முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள் அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தாளாளருக்கு வாழ்த்துக்கள். மேலும் இந்த நிகழ்வு எங்கள் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம்.

Comments are closed.