ஆழ்ந்த நித்திரையில் கீழக்கரை நகராட்சி.. மீண்டும் தலை தூக்கும் வெறி நாய் தொல்லைகள்…

கீழக்கரையில் வெறி நாய் தொல்லை என்பது தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. கடந்த வருடம் ஒரு சிறுவனின் உயிர் பலியாகியது, அது போல் ஒரு இளம் பெண்ணும் வெறி நாயினால் பெரும் காயத்திற்கு உள்ளானர்.

அதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் தொடர் அழுத்தத்தால் வெறி நாய்களை பிடிக்க தனியார் தன்னார்வ நிறுவனம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை சரிவர செயல்படுத்தாத காரணத்தால் மீண்டும் வெறி நாய்களின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது.

இன்று (22-03-2018) கீழக்கரை புதுத் தெருவில் ஒரு ஆணும், சிறு பெண் குழந்தையும் நாய் கடிக்கு ஆளாகியுள்ளார்கள். இதன் விபரம் அறிந்த தவ்ஹீத் ஜமாத்தினர் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறியதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பிரச்சினையை கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

மேலும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி சில வாரங்களுக்கு முன்பு SDPI, நாம் தமிழர், தமுமுக போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் டீம் மற்றும் இன்னும் பல சமூக நல அமைப்பு சார்பாக கீழக்கரை ஆணையரிடம் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.