கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

கீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கீழக்கரை நகரில் நிலவும் சுகாதரக்கேட்டினை சீர் செய்து டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக உள்ளூரில் இருக்கும் பொதுநல அமைப்புகள், சமூக நல சங்கங்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை நாளில் கொடுக்க வேண்டி கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக்கு கழகம் சார்பாக நேற்று சமூக வலை தளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இன்று கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் எவ்வித சுகாதார நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கில் இருந்து வருவதை சுட்டிக் காட்டியும், அவசர அவசியம் கருதி கீழக்கரை நகராட்சி பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் சட்டப் போராளிகள் இயக்கம், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.