கீழக்கரையில் அடையாளம் தெரியாத நபர்களால் கடை நாசம்..

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே சுலைமான் என்பவர் செல் வேர்ல்டு என்கிற பெயரில் கைபேசி கடை நடத்தி வருகிறார். இன்று இரவு சுமார் 7 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள்  கைபேசியை சரி செய்ய வந்த இடத்தில் கடை உரிமையாளருடன் தகராறு செய்துள்ளனர். பின்னர் தகராறு முற்றி கடை உரிமையாளரை தாக்கியதுடன், கடையையும் அடித்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கடை உரிமையாளரான சுலைமான் என்பவருக்கும், கடையில் இருந்த நதீர் சாகுல் ஹமீத்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த இருவரும் உடனடியாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  இச்சம்பவத்தால் கீழக்கரை கடைத் தெருக்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கீழக்கரையைச் சார்ந்தவர்களாகவே இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.