கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே வீணாகும் குடிநீர் – விரைந்து சீர் செய்ய வேண்டுகோள்

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தை அடுத்த பழைய அப்பா மெடிக்கல் கட்டிடம் அருகாமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நகராட்சியின் குடிநீர் குழாய் வழியாக எந்நேரமும் குடிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது. ஏற்கனவே கீழக்கரை – இராமநாதபுரம் சாலையில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடி நீர் குழாய் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு, கீழக்கரை பகுதிக்கு வர வேண்டிய குடி நீர் பெருமளவு வீணடிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல்வேறு புகார் மனுக்களை கீழக்கரை பகுதி சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகருக்குள் தட்டுத் தடுமாறி வந்து சேரும் சிறிதளவு குடிநீரும் இது போன்று வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு அருகாமையிலேயே இது போன்று குடிநீர் வீணாவதை சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது முறையல்ல.

‘சிறு துளி.. பெரு வெள்ளம்.. என்பர். ‘ இது சிறிய உடைப்பு தானே.. என்று சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குழாயை சரி செய்ய முன் வர வேண்டும். இதை போலவே கீழக்கரை நகர் முழுவதும் குடிநீர் குழாய்கள், பைப்புகளை சீர் செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். நம் கீழக்கரை நகரில் சில பகுதிகளுக்கு மட்டும், மிகக் குறைந்த அளவே வந்து கொண்டிருக்கும் இந்த காவிரி நீர், நம் நகர மக்கள் முழுமைக்கும் தாகம் தீர்க்கும் தண்ணீராக என்று மாறும்?? என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் மக்களுக்கு, குடி நீர் வீணாகும் குழாயையாவது சரி செய்து ஆறுதல் படுத்த அதிகாரிகள் விழைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..