வங்கிகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் – ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது.

மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அவ்வாறு பண பரிவர்த்தனை செய்தால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தொகை இரண்டு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக தான், இது போன்ற கட்டுப்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.