Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கப்படாமல் கிடப்பில் கிடக்கும் திட்டம் – மக்கள் பிரதிநிதிகள் முயற்சிப்பார்களா..?

இராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கப்படாமல் கிடப்பில் கிடக்கும் திட்டம் – மக்கள் பிரதிநிதிகள் முயற்சிப்பார்களா..?

by keelai
இராமநாதபுரம் கீழக்கரை நெடுஞ்சாலையில் இரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்படாமல் இருப்பதால் ரயில்வே கேட் அடைக்கப்படும் வேளைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெகு நேரம் காத்துக் கிடக்க கூடிய நிலை உள்ளது.
இதனால் அவசர வேலைகளுக்கு செல்பவர்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் கூட செல்ல வழியில்லாமல் நீண்ட நேரம் நிற்க வேண்டியதாக இருக்கிறது. ரயில்வே கேட் திறந்த பிறகும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் ஈ.சி.ஆர் சாலையின் வழியே திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் பயணிகளும் நெடு நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் புதிய மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக கடந்த 2012  ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா  வெளியிட்ட  அறிவிப்பில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ரூ 322 கோடி செலவில் ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் அமைக்க இருப்பதாகவும், அதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் – கீழக்கரை சாலையில் உள்ள இருப்புபாதையில் புதிய மேம்பாலம் அமைக்க இருப்பதாகவும் நம் மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இராமநாதபுரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர்  ஜவாஹிருல்லாவும் கடந்த 2014  ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்ட மன்ற கூட்டத்தில் இராமநாதபுரத்தில் அமைக்கப்பட வேண்டிய ரயில்வே மேம்பாலம் குறித்து கேள்வி எழுப்பி தகுந்த பதிலை பெற்றார். அது சட்ட மன்ற அவை குறிப்பிலும் இடம் பெற்று இருக்கிறது.
அதே வேளையில் அரசால் இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கென வகுக்கப்பட்ட திட்டங்கள், இன்று வரை செயல்படுத்தப்படாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ராமநாதபுரம் பகுதியில் இருந்து தான் மாண்புமிகு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதே ராமநாதபுரம் பகுதியில் இருந்து தான் பாராளுமன்ற  உறுப்பினராக அன்வர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஆகவே பொதுமக்களின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் நீண்ட கால மக்கள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும்  மக்கள் பிரதிநிதிகள் மிக விரைவில்  முயற்சிக்க வேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!