Home செய்திகள் வேடசந்தூர் அருகே காருடன் எரிந்து எலும்புக் கூடாக மீட்கப்பட்ட ஓட்டல் அதிபரின் மகன் வழக்கில் 3பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காருடன் எரிந்த நிலையில் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட ஓட்டல் அதிபரின் மகன் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதே, கொலைக்கு காரணமாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேடசந்தூர் அருகே வேலாயுதம்பாளையம் கணவாய் பகுதியில் நேற்று காலை கார் ஒன்று எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்ற சிலர், அருகில் சென்று பார்த்த போது, காருக்குள் ஒருவர் எரிந்து எலும்புக் கூடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற வடமதுரை போலீசார், கார் தொடர்பாகவும், காரில் எலும்புக் கூடாக கிடந்தவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்தக் கார் வேடசந்தூர் அருகே கோவிலூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் மகாமுனி என்பவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.காரை ஓட்டி வந்தது அவருடைய மகன் சிவா என்பதையும், முந்தைய நாள் இரவு அவர் தோப்புப் பட்டி கிராமத்திற்கு கரகாட்டம் பார்க்கச் சென்றதையும் போலீசார் உறுதி செய்தனர்வேலாயுதம்பாளையம் கணவாய் பகுதியில் சிவா காரை நிறுத்தி மது அருந்தி உச்ச போதையில் இருந்த போது மின் கசிவு ஏற்பட்டு கார் எரிந்து சிவா உயிரிழந்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.ஆனால் தனது ஊரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் கணவாய்க்கு, அவர் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது. இதை அடுத்து, சிவாவின் தொலைப்பேசி அழைப்புகள் ஆராயப்பட்டன.அப்போது தோப்புப் பட்டியைச் சேர்ந்த தனது நண்பர் விவேக் என்பவருடன் சிவா கடைசியாக பேசி இருப்பது கண்டறியப்பட்டது. விவேக்கைப் பிடித்து விசாரித்த போது, இது திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியானது.

நண்பன் எனக் கூறி கொண்டு விவேக்கின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அவருடைய மனைவியை சிவா கவர நினைத்ததாகக் கூறப்படுகிறது.விவேக் வீட்டில் இல்லாத சமயத்தை சிவா பயன்படுத்திக் கொண்டு விவேக்கின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியதாகவும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு விருப்பத்திற்கு இணங்க வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதை தனது கணவர் விவேக்கிடம் கூறி அவரது மனைவி புலம்பியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த விவேக், சிவாவை பல முறை எச்சரித்த போதும் அவர் கேட்கவில்லை. எனவே சிவாவை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணிய விவேக், தனது நண்பர்கள் முனுசாமி, வடிவேலு ஆகியோரோடு சேர்ந்து கொண்டு திட்டம் தீட்டியதாக போலீசார் கூறியுள்ளனர்.நேற்று முன் தினம் தோப்புப்பட்டியில் திருவிழா நடக்கவே, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த விவேக், சிவாவை கரகாட்டம் பார்க்க அழைத்துள்ளார். சிவா அங்கு செல்லவே அனைவரும் மது வாங்கிக் கொண்டு புங்கம்பாடி என்ற இடத்திற்கு சென்று அருந்தியுள்ளனர்.சிவாவுக்கு போதை தலைக்கேறவே, அவரை மூன்று பேரும் கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு, காரில் தூக்கி போட்டு கணவாய் பகுதிக்கு கொண்டு சென்றதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் சிவாவை ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்து பெட்ரோலை ஊற்றிக் கொளுத்து விட்டு தப்பிச் சென்றது வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸ் மாரிராஜ் பாசித் தர்மேந்திரா பாலாஜி ஆகியோரின் விசாரணையில் கண்டுபிடிக்கபட்டுள்ளது விவேக் முனுசாமி, வடிவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com