கடலாடியில் தாசில்தாருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்க்கு தாலுகா அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட திருட்டு  மணல் டிராக்டர்களே சாட்சி.  இந்நிலையில் ஒரு வி ஏ ஓ மற்றும் இரண்டு தலையாரிகளை இடமாற்றம் செய்து  துணை ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இந்த செயலுக்கு தாசில்தாரே முக்கிய காரணம் என எண்ணி வருவாய்த்துறை ஊழியர்களின் கோபம் தாசில்தார் மீது திரும்பியுள்ளது.
இதன் காரணமாக, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக வட்டாட்சியர் மீது கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சுமத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப்போராட்டம் என, கடந்த இரு நாட்களாக தாசில்தாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.  ஆனால் பொது மக்கள் இது குறித்து  கூறுகையில், தற்போதுள்ள தாசில்தார் முத்துலட்சுமி சிறப்பாக  செயல்பட்டு  மணல் திருட்டை தடுக்கிறார். இதனால் மணல் கடத்தல்காரர்களின் மூலம்  வந்த வருமானத்தை இழந்த, இந்த வி ஏ ஓக்கள்  மற்றும் தலையாரிகள்  வட்டாட்சியர் மீது பொய் புகார் கூறி, போராட்டம் என்ற பெயரில் தங்கள் துறை சார்ந்த ஒரு  உயர் அதிகாரி மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக கடுஞ்சொற்களை பயன்படுத்தி நோட்டீஸ் அடிப்பது என்பது மிகவும் மோசமான செயல் என , குற்றம் சுமத்துகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தலையிட்டு  உண்மை நிலையை கண்டறிந்து போராட்டம் நடத்துபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்