கடையம் அருகே அனுமதியற்ற சாலையோர பார்களால் அங்கன்வாடி குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயகர நிலை…

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்காலிபட்டியில் இருந்து மயிலப்பபுரம் செல்லும் சாலையில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. கடந்த வாரம் அங்கன்வாடியின் கீழ் புறம் திடிரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் மைலப்புரம் , லட்சுமியூர் பகுதிகளிலிருந்து வெய்க்காலிப்பட்டி பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். தற்போது டாஸ்மாக் மதுபானகடை திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் போதை மிகுதியால் ரோட்டோரங்களில் ஆடை விலகி கிடப்பதும், ஆபாச வார்த்தைகள் பேசுவதுமாய் இருக்கும் அவலநிலை உள்ளதால் பள்ளி மாணவிகள் மிகுந்த அவஸ்தைக் குள்ளாகின்றனர்.

மேலும் இரவானால் குடிமகன்கள் அருகிலுள்ள அங்கன்வாடி மையம் முன்பிருந்து குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.எனவே பள்ளி மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் நலன் கருதி டாஸ்மாக் கடையை இந்த பகுதியை விட்டு அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லையெனில் சமூக ஆர்வலர்கள் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்களின் முடிவால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்