Home செய்திகள் மே 22: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு இரண்டாம் ஆண்டு நினைவு:-பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும்!- எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

மே 22: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு இரண்டாம் ஆண்டு நினைவு:-பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும்!- எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

by Askar

மே 22: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு இரண்டாம் ஆண்டு நினைவு:-பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும்!- எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய அநியாயமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி இன்றுடன் (மே 22) இரண்டு வருடம் நிறைவடையும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படவும் இல்லை.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா எனும் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அவ்வாலையிலிருந்து வெளிவரும் கொடிய நச்சுப்புகையால் தூத்துக்குடி பகுதி மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து வந்தனர். அதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்திவந்த நிலையில், போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018ம் ஆண்டு மே 22ஆம் தேதி சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாகச் சென்றனர். அப்போது பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளிநாட்டு வேதாந்தா நிறுவனத்திற்காக சொந்த நாட்டு மக்களையே சிறிதும் இரக்கம் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்தது ஆளும் அதிகார வர்க்கம். இதில் மாணவி ஸ்னோலின் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிலர் கை, கால்களை இழந்து வாழ்நாள் முடக்கமாகியுள்ளனர்.

இந்த துயர சம்பவம் நடந்த அரங்கேற்றப்பட்ட பின்னர் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு வழிகளில் ஆலையை மீண்டும் திறப்பதற்குண்டான நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக, 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு, நூறாவது நாளில் தங்கள் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும், உறவையும் இழந்த மக்கள், மீதமிருப்பதை காப்பாற்ற போராடும் போது, துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைத்து, அவர்களை படுகொலை செய்துள்ளது ஆளும் அதிகார வர்க்கம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜாலியன் வாலாபாக் படுகொலையினை நினைவுபடுத்துகிறது. படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியினர் ஆவர். யாரையெல்லாம் சுட வேண்டும் என திட்டமிட்டுதான் அந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

மக்களின் போராட்டங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டு தங்களுக்கான அரசியல் ஆதாயங்களைத் தேடிக்கொள்ளும் ஒரு தேசியப் பின்னணி தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் இருப்பதை மறுக்க முடியாது. பா.ஜ.க-விற்கு அதிக தேர்தல் நிதியை கொடுக்கும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனத்தை பாதுகாக்கவும், எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கவும் பாஜக அரசு, தமிழகத்தில் உள்ள அதன் பினாமி அரசு மற்றும் காவல்துறை என எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய அரச பயங்கரவாதம் தான் மே22ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு.

ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ள தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு விரைவாக நீதி கிடைக்கப்பெற வேண்டும். இந்த கொடூர துப்பாக்கிச் சூடு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் மூலம் இன்னும் நீதி கிடைக்கப்பெறவில்லை. ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைத்திட வேண்டும். சம்பவத்தில் குற்றம் இழைத்த அனைத்து காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகளும், அதிகார வர்க்கங்களும் தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை, உளவுத்துறை ஆகியவை இணைந்த அரச பயங்கரவாதம் இந்நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைப்படியும், உயிரிழந்த தியாகிகளை போற்றும் வகையிலும், நாசகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வகையில் அரசு கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏ.கே.கரீம் ஒருங்கிணைப்பாளர் SDPI கட்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!