Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்தை காக்க புதிய சங்கம்…

தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்தை காக்க புதிய சங்கம்…

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் அசாதாரண நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய சங்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.  

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். மக்களின் எதிர்ப்பு காரணமாகக் கடந்த மே 28-ம் தேதி, அரசாணை வெளிடப்பட்டு ஆலைக்கு சீல் வைத்தது தமிழக அரசு. அன்றிலிருந்து ஆலை இயங்கவில்லை. இதனால் ஆலையைச் சார்ந்திருந்த தொழில்கள் பாதிப்பு அடைந்தன. இதன் காரணமாக மறைமுகமாக வேலை பெற்று வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை செய்து வந்தவர்களிடம் பணப்புழக்கம் குறையத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஆலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்தந்தத் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் தரப்பு வரவேற்றுள்ளது. அதே நேரத்தில், இதை  எதிர்த்தும், ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர், கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், கண்டனத்தைத் தெரிவித்தும் அடுத்தகட்டப் போராட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், “தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம்புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கத்தினர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இச்சங்கத்தின் தலைவர் பெருமாள்சாமி, “தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களோடு தூத்துக்குடியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளது. தரைவழி, வான்வழிப் போக்குவரத்து வசதிகள் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களைக் கொண்டு வர கடல்வழிக் கப்பல் போக்குவரத்துக்காகத் துறைமுக வசதியும் இருப்பதால்தான் புதிய தொழிற்சாலைகளைத் தொடக்கவும் தூத்துக்குடியைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் தூத்துக்குடி மாநகரம் வளம் பெற்று வந்தது. ஆனால், சமீப காலங்களில் இந்த நகரம் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகிறது.

 இதனால், வணிகத்துறை,  தொழில்துறை ஆகியவற்றில் பின்னடைவை சந்தித்து வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு  வருகின்றன. இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதால் பல குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், தூத்துக்குடிக்கு வர வேண்டிய புதிய தொழிற்சாலைகள் வேறு மாவட்டம் தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் நமது மாவட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.

இளைஞர்கள் வேலை இழந்துக் காணப்படுவதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியிலும் பணக் கஷ்டத்தாலும் தவறான வழியில் திசை திருப்பப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்த நிலை மாற, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், வளங்களை முறைப்படுத்துவதும், வாழ்வாதாரங்களுக்கு எதிராகத் தொடங்கப்படுகிற அனைத்து சதித்திட்டங்கள், சவால்களை ஒன்றிணைத்து முறியடிப்பதுதான் இச்சங்கத்தின் முக்கிய நோக்கம்.  தொழில்துறையில் மாணவர்கள், இளைஞர்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை பெரிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டங்களை வகுத்துள்ளோம்.

தொழில்வளர்ச்சிக்கு எதிராக உள்ள சவால்கள் குறித்து கருத்தரங்குகள் நடத்தவும், வல்லுநர்களை அழைத்து அறிவியல்பூர்வமான விளக்கங்களை அளிக்கவும் தொழில்துறை குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்திடவும் திட்டமிட்டுள்ளோம். தொழிற்சாலைகளை அணுகி, அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசிடமிருந்து பெற்றுத்தரும் பாலமாக இருக்கும். இவை அனைத்தும் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுதான் நடக்கும்என்றார். 

செய்தி:- தூத்துக்குடி நிருபர் – அஹ்மது ஜான்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!