Home செய்திகள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் சாதனை; கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டு..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் சாதனை; கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டு..

by mohan

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு ஒரு பெண்மணியின் உயிரை காப்பாற்றி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆலங்குளம் காசியாபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய மாலதி என்ற பெண்மணிக்கு குமட்டலுடன், இரண்டு நாட்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது கடைசி மாதவிடாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததாக தெரிவித்தார். அவருக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்து குடல்வால் தொற்று இருப்பதை கண்டறிந்து அவருக்கு நுண்துளை மூலம் குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் முடிவு எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, அவரது வயிற்றுப் பகுதியின் உட்புறம் 250 முதல் 350 மில்லி லிட்டர் அளவில் இரத்தம் இருந்ததை கண்டறிந்தனர். உடனே மற்ற பகுதிகளையும் நுண்துளை மூலம் ஆராய்ந்து பார்த்த போது இடது கருக்குழாயில் கருத்தரித்து, கரு குழாய் வெடித்து அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுக் கொண்டிருப்பதை கண்டறிந்தனர். நுண்துளை கருவி மூலம் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முயன்று, கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், நோயின் தீவிர தன்மையை உணர்ந்து, உடனடியாக வயிற்றுப் பகுதியை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐந்து நிமிடத்தில் ரத்தப்போக்கு அதிகமாக வந்து கொண்டிருந்த கருக்குழாய் பகுதியை கண்டறிந்து ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது. மகப்பேறு சிகிச்சை மருத்துவர். புனிதவதி அவர்களும் அழைக்கப்பட்டு, வெடித்த கருக்குழாயும் அகற்றப்பட்டது. தொற்று ஏற்பட்ட குடல் வால்வு பகுதியும் அகற்றப்பட்டது. இதற்கிடையில் நோயாளிக்கு தேவையான ரத்தமும் வழங்கப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் கூறுகையில், இது போன்ற சிக்கலான பல அறுவை சிகிச்சைகள் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் துரிதமாக செயல்பட்டு பெண்மணியின் உயிரை காப்பாற்றிய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மருத்துவர். முத்துக்குமார சுவாமி, மருத்துவர். விக்னேஷ், மகப்பேறு மருத்துவர் மருத்துவர். புனிதவதி, மயக்க மருந்து மருத்துவர். பிரியதர்ஷினி, செவிலியர் ஆனந்த ஜோதி, அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர் சதீஷ்குமார் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரையும் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!