Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய “இலக்கை நோக்கி” இளைஞர்களின் எழுச்சி மாநாடு…

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய “இலக்கை நோக்கி” இளைஞர்களின் எழுச்சி மாநாடு…

by ஆசிரியர்

இலக்கை நோக்கி இளைஞனே வா” என்ற தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவிப்பு செய்து மூன்று மாத காலமாக தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் உள்ளரங்கு நிகழ்ச்சிகள் தெருமுனைக்கூட்டம் தனிநபர் சந்திப்பு ஆகிய பிரச்சாரங்களை முன்னெடுத்தது.

இதன் இறுதி கட்டமாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு)மாவட்டம் கீழக்கரை கிளைகள் சார்பில் இன்று (29-01-2021) கீழக்கரை தெற்குத்தெருவில் அமைந்துள்ள கிஷ்கிந்தா திடலில் இலக்கை நோக்கி இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த எழுச்சி மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி, மாவட்ட துணை தலைவர் முகம்மது பஷீர், மாவட்ட துணை செயலாளர்கள் ஹக், மன்சூர், சுல்தான், தஸ்தஹீர், மற்றும் கீழக்கரை அனைத்துகிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல் நிகழ்ச்சியாக மக்தப் மதரஸா மாணவிகள் நடத்திய பர்தா அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து அமீனுல்லாஹ் மிஸ்பாஹி  நடுவராக கொண்டு இளைஞர்களின் சீரழிவிற்கு பெரிதும் காரணம் பெற்றோர்கள்களா? அல்லது சமுகமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து TNTJ மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி “ஏமாறதீர்கள் ஏமாற்ற வருகிறார்கள்” என்ற தலைப்பிலும்,  TNTJ மாநில பேச்சாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “இளைஞனே விழித்தெழு வெற்றிபெறு” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் குழந்தைகளும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் கீழக்கரை வடக்குகிளை தலைவர் கண்மனி சீனி நன்றியுரையுடன் மாநாடு நிறைவு பெற்றது.

தீர்மானங்கள்.

1.இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7℅ ஆக உயர்த்த கோரிக்கை

தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்டகால ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் பல கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 % உள் ஒதுக்கீட்டை அன்றைய தமிழக அரசு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இன்று வரைக்கும் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை.

தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு தற்போது நடப்பிலிருக்கும் 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும் என்று இந்த மாநாடு கோரிக்கை விடுக்கின்றது.

2.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரிக்கை

இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தி அகதிகளாக மாற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கொரோனா பேரிடர் காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒரு சமுதாயத்தை முற்றிலும் அகதிகளாக மாற்றும் வகையில் இந்த சட்டம் இருக்கின்றது. வீழ்ந்து கிடக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்கும் பணிகளைச் செய்யாமல் தொடர்ந்து ஒரு சமூகத்தை குறிவைக்கும் வகையிலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு குடிமைத் திருத்தச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் போன்ற நடவடிக்கைகளை எந்த நிலையிலும் மேற்கொள்ளக்கூடாது என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

3.இஸ்லாமிய கட்சிகள் ஓரணியில் திரளக் கோரிக்கை

தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக இஸ்லாமிய கட்சிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து அரசியல் கட்சிகளிடம் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்று இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல அணிகளில் இணைந்து எதிர் அணியாக போட்டியிடுவது இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை தரும் என்பதை உணர்ந்து அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று அதன் மூலம் சமுதாயத்தின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முழங்க வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4.நபிவழிக்கு முரணான காரியங்களை விட்டொழிக்க கோரிக்கை

அறியாமை இருளில் சிக்கிக் கிடந்த மக்களை ஓரிறைக் கொள்கையை நோக்கி அழைத்த உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அனாச்சாரங்களும், மார்க்கத்திற்கு முரணான காரியங்களும் நடைபெற்று வருகின்றது.

இஸ்லாமிய சமுதாயம் இதையெல்லாம் தவிர்த்து நேர்வழி பெற்று சுவனப் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

.

5.அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வரும் நிலையில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. தமிழத்தில் இருக்கும் கட்சிகளில் பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய வேட்பாளரை மட்டுமே நிறுத்துகின்றன.

எனவே அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி இஸ்லாமியர்கள் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். அதுபோல கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் இஸ்லாமிய சமுதாய கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி அதிக இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று இந்த மாநாடுகேட்டுக் கொள்கிறது.

6.வேளாண் சட்டங்களை திரும்பபெற கோரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கும்,விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்து விவசாய நிலங்களை கார்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்தும் விதமான சட்டமாக இருக்கின்ற காரணத்தால் இந்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளும்,பொதுமக்களும் போராடி வருகிறார்கள் எனவே இந்த கொடூர சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை இந்த மாநாடு வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

7.விவசாயிகளின் மீது நடத்திய தடியடிக்கு கண்டனம்

விவசாயிகளையும் நாட்டு மக்களையும் வெகுவாக பாதிக்கும் இந்த வேளாண் கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வன்முறைக்கு வழிவகுக்காமல்,தலைநகர் டெல்லியில் அறவழியில் போராடி வரும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் மீது டெல்லி காவல்துறையை ஏவிவிட்டு தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு என மோடி அரசு நடத்தி வரும் அரச பயங்கரவாதத்தை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக மத்திய அரசு தனது வெறியாட்டங்களை நிறுத்தி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று நாட்டின் அமைதியை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு இதை செய்யத் தவறினால், விவசாயிகள் போராட்டம் என்ற நிலைமாறி மத்திய அரசுக்கு எதிரான மக்கள் புரட்சியாக மாறும் என்று மோடி, அமித்ஷா வகையறாக்களை இந்த மாநாடு எச்சரிக்கிறது.

8.சீரழியும் இளைய சமுதாயம் சீர்பெற பாடுபடுவோம் பொதுமக்களுக்கு கோரிக்கை

போதை மற்றும் சமூக சீர்கேடுகளில் சிக்கி சீரழிந்துவரும் இளைய சமுதாயத்தை மீட்டு எடுத்து அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்துள்ளது.

வளரும் தலைமுறை தமது சரியான இலக்கை புரிந்துணர்ந்து அதை நோக்கிய பயணத்தை அமைத்துக்கொள்ளும் வகையில் உண்டான வழிகாட்டுதல்கள் மற்றும் பிரச்சாங்களை தொடர்ந்து செய்துவரும் என்பதையும் அதற்கு உண்டான அத்தனை ஒத்துழைப்பையும் பொதுமக்கள் அளிக்கவேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9.கீழக்கரை நகராட்சிக்கு கண்டனம்

கீழக்கரையின் முக்கிய பகுதிகளில் குப்பைகூளங்கள் நிறைந்து காணப்படுகிறது.நிரம்பும் குப்பைகளை வாரக்கணக்கில் அகற்றாமல் கீழக்கரை நகராட்சி மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதால் குப்பைகள் நாற்றமெடுத்து குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் செவிடன் காதில் ஊதும் சங்குபோல் நகராட்சி நிர்வாகம் நடந்துகொள்வதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இனிவரும் காலங்களில் பிரதான சாலைகளில் மட்டும் தேங்கும் குப்பைகளை அகற்றாமல் நகரின் முக்கிய பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்றி தூய்மையை ஏற்படுத்த வேண்டும் என்று கீழக்கரை நகராட்சியை இம்மாநாடு வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.

10.நிரந்த ஆனையர் நியமனம் தேவை

கீழக்கரை நகராட்சிக்கு நீண்ட காலமாக நிரந்தர ஆனையர் நியமிக்கபடாத காரணத்தால் குப்பைகள் அகற்றப்படாமல் இருத்தல்,சாலைகள் மற்றும் தெருக்களில் சாக்கடை நீர் குளம்போல் தேங்கியிருத்தல்,சாலைகள் சீரமைக்கப்படாமல் இருத்தல்,வெறிநாய்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளாமல் வெறிநாய்களை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ளுதல் போன்ற எண்ணற்ற குளறுபடிகள் அவ்வப்போது தொடர்ந்தவண்ணம் இருக்கிறது எனவே உடனடியாக கீழக்கரை நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை நியமிக்கவேண்டுமாறு சம்பந்தபட்ட துறையை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11.நெல்லையில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம்.

நெல்லையில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்களின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதுடன் அவர்களின் வீடுகளையும் முஸ்லிம்களின் கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கி நீதிமன்றத்தையும்,சட்டத்தையும் மதிக்காமல் சர்வாதிகாரி போல் நடந்து கொண்ட நெல்லை மாவட்ட சப் கலெக்டர் சிவகிரிஷ்ண மூர்த்தியை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.90களில் இருந்த வரலாறு மீண்டும் திரும்புவதற்கு ஒருகாலமும் முஸ்லிம் சமுதாயம் இடம் கொடுக்காது என்பதையும் ஆளும் வர்க்கத்திற்கு இந்த மாநாட்டின் வாயிலாக எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!