இளைஞர்களின் அரசு பணி கனவை நனவாக்க அறிவுசார் மையத்தை அமைத்த ஆற்றல்மிகு அரசு; தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி..
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” (குறள் 396,) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க மணலின் கண் உள்ள கேணியிலே ஆழமாகத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். அது போல மக்கள் நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக 05.01.2024 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகராட்சியில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மைய கட்டடத்தினை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் தங்களது வாழ்க்கையில் மேம்படுவதற்காக அறிவு சார் மையங்களை நிறுவி வேலைவாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் உயர எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் உறுதுணையாக நிற்கும் மக்கள் அரசாக திகழ்கிறது.
இம்மையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டித் தேர்வில் கலந்து கொள்வோர் படிக்க தேவையான பொது அறிவு நூல்கள், அறிவியல், கணிதம், பொருளாதாரம், அரசியல், வரலாறு, இலக்கியம் நிதி மேலாண்மை மற்றும் தினசரி நாளிதழ்கள் உள்ளிட்டவை வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 75 பேர் அமர்ந்து படிக்கும் வகையில், வாசிப்பு அரங்கம், ஸ்மார்ட் கிளாஸ் அரங்கம், குழந்தைகள் படிப்பதற்கான வசதி போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், ரூ.1.5 கோடியில் ‘நூலகம் மற்றும் அறிவுசார் மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுசார் மையத்தில், இந்திய நடுவண் அரசின் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கித் தேர்வு நிறுவனம், ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு சிறந்த போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள், வெற்றியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிகளுக்கு சென்றவர்களையும் அழைத்து வந்து பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.
“கல்லூரி படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கு அரசு பணி என்பது ஒரு பெரும் கனவாக உள்ளது. அந்த கனவு நிறைவேற, வசதி படைத்தவர்கள், தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களுக்கு சென்று தயாராகிறார்கள். வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியேயும் நண்பர்களுடன் கலந்துரையாடியும் வழிகாட்டுதலும், பயிற்சியும் இல்லாமல் சுயமாக தயாராகிறார்கள். தொடர் பயிற்சியும், கடந்த கால போட்டித்தேர்வு வினாத்தாள்களும் மட்டுமே அவர்களுடைய ஒரே துருப்பு சீட்டாக உள்ளது. தற்போது அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த அறிவுசார் மையத்தில் பயிற்சியும் வழிகாட்டுதலும், போட்டித் தேர்வுக்கான அனைத்து வகை புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
போட்டி தேர்வர்கள், இந்த நூலகத்தில் அமர்ந்து படித்து, அங்குள்ள அறிவுசார் மையத்தில் தினமும் இலவசமாக நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடியில் இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அறிவுசார் மையம் குறித்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிவித்ததாவது,
க.வேல்முருகன், சங்கரன்கோவில்: என் பெயர் க.வேல்முருகன், எனது தந்தை பெயர் கந்தசாமி. நான் இலவன்குளம் ரோடு நேதாஜி நகரில் வசித்து வருகிறேன். நான் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4 தேர்வுக்கு படித்து வருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். என்னால் போட்டித் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் சென்று படிப்பதற்கு வசதியில்லை. என்போன்ற ஏழை மக்களுக்கு இந்த அறிவு சார்மையத்துடன் கூடிய நூலகம் மிகவும் உதவியாக உள்ளது. இங்கு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் படிக்கும் வகையில் அனைத்து புத்தகங்களும் நிறைந்துள்ளது. இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெ.மணிகண்டன், சங்கரன்கோவில்: எனது பெயர் வெ. மணிகண்டன், எனது தந்தை பெயர் வெள்ளத்துரை. திருவேங்கடம் சாலை சங்கரன்கோவிலில் வசித்து வருகிறேன். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ரயில்வே தேர்வுக்கு முயற்சி செய்து வருகிறேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். என்னால் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கு வழியில்லை. இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெறும் வகையில் அனைத்து புத்தகங்களும் உள்ளது. இங்கு பயிற்சி மையத்தின் மூலம் இலவச மாதிரித் தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. என்போன்ற சாமானிய மக்களுக்கு இந்த அறிவுசார் மையம் பேருதவியாக உள்ளது. இந்த அறிவுசார் மையத்துடன் கூடிய நூலகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ள அறிவுசார் மையம் அரசுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் அரசுப்பணி கனவை நனவாக்க என்றும் உறுதுணையாக இருக்கும்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.