தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இருவரையும் ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:- திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு. ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜனதா அரசுதான் எடுத்துக்காட்டு. சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டதாக பேசிவிட்டு சென்றார். உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தவர்கள், இவர்கள்தான் (10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் தாய்மார்கள், ஏழைகள். வேலையில்லா திண்டாட்டம் மூலம் இளைஞர்கள். ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில் நடத்துபவர்கள். 3 சட்டங்கள் மூலம் உழவர்கள். சிஏஏ மூலம் சிறுபான்மையினர் மக்கள். இப்படி 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார். இன்னொரு முக்கிய காரணம் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை தென்மாநிலங்களில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. தேர்தல் பத்திரம் ஊழல் வந்த பிறகு வட மாநிலங்களிலும் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டு பதட்டப்படுகிறார்.பதட்டத்தில் ஹேமந்த் சோரன், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையால் கைது செய்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருமான வரித்துறையை ஏவிவிட்டு நோட்டீஸ் விடுகிறார்.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ ரெய்டு விடுகிறார். கூட்டணி கட்சிகளை போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். ஆட்சி வரவேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்.இவ்வாறு முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
59
You must be logged in to post a comment.