ஆண்டிபட்டி பேரூராட்சி பணியாளர்கள் 32 பேருக்கு கொரோனா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் 32 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் 20 பேர் அலுவலகத்திலும் 130 பேர் களப்பணி செய்து வருகின்றனர்.இவர்களில் கடந்த வாரம் இங்கு பணிபுரிந்து வந்த தலைமை எழுத்தர் 45 வயது உடைய பெண் நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் எழுத்தர், வரி வசூல் பணியாளர், பெண் துப்புரவு பணியாளர், குடிநீர் வினியோக பணியாளர் ஆகிய 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று தற்காலிக தூய்மை பணியாளர்கள் 15 பேர், தற்காலிக களப்பணியாளர்கள் 11 பேர், தற்காலிக குடிநீர் விநியோக பணியாளர்கள் 3 பேர், தற்காலிக பரப்புரையாளர் ஒருவர் என 32 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களது உறவினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..