Home செய்திகள்உலக செய்திகள் தென்காசியில் 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; இணை இயக்குனர் பாராட்டு..

தென்காசியில் 6 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; இணை இயக்குனர் பாராட்டு..

by Abubakker Sithik

தென்காசியில் உயிர் காக்கும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை ஆறு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. மருத்துவ குழுவினரை இணை இயக்குனர் நலப்பணிகள் மரு. பிரேமலதா பாராட்டினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கீழப்பாவூர் பாரதியார் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சிவன் ராஜ் (23). இவருக்கு ஞாயிற்று கிழமை அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரவு 7 மணியளவில் கொண்டு வரப்பட்டார். அவரது காலில் பயங்கரமாக காயம் ஏற்பட்டு எலும்புகள் பல துண்டுகளாக உடைந்து, வெளிப்புற சதைகளும் சிதைந்து இரத்தம் பெரிதளவில் வடிந்து கொண்டிருந்தது. அவருக்கு அனைத்து முதலுதவிகளும் செய்து, மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எலும்பு முறிவு மருத்துவர் ராம் சுந்தர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் இடம் ஆலோசித்து, நோயாளிக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை உணர்ந்து, அவருக்கு உடனடியாக ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும் விதமாகவும், எலும்பு முறிவினை சரி செய்யும் பொருட்டும் வெளிப்புறமாக கம்பி பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக நோயாளிக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, பணி மருத்துவர் கார்த்திகேயனும், மயக்கவியல் மருத்துவர் நீத்தவும், அவசர சிகிச்சை பிரிவு செவிலியர்களும், பணியாளர்களும் துரிதமாக செயல்பட்டு நோயாளியை அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தனர். மருத்துவனை கண்காணிப்பாளர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளியின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை இரண்டு மணி நேரத்தில் வாங்கி வழங்கினார். இரவு 11 மணி அளவில், சிக்கலான அறுவை சிகிச்சை என்பதை கருத்தில் கொண்டு, எலும்பு முறிவு மருத்துவர் ராம் சுந்தர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின் ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். தற்போது நோயாளி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட வார்டில் நலமுடன் உள்ளார்.

துரிதமாக செயல்பட்டு நோயாளிக்கு விரைவாக அறுவை சிகிச்சை செய்ய ஒத்துழைத்த பணி மருத்துவர் கார்த்திகேயன், எலும்பு முறிவு மருத்துவர் ராம் சுந்தர், மயக்கவியல் மருத்துவர் நீத்து மற்றும் பணியிலிருந்த செவிலியர்கள், செவிலிய உதவியாளர்கள், அறுவை அரங்கு உதவியாளர்கள், ரத்த வங்கி அலுவலர்கள் என அனைத்து பணியாளர்களையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டினார். இணை இயக்குனர் நலப்பணிகள் மரு. பிரேமலதா மருத்துவக் குழுவினரை பாராட்டி, சிறப்பாக செயல்படும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறும் போது, தென்காசி மருத்துவமனையில் விடுமுறை தினங்களிலும் அவசர சிகிச்சை பிரிவுகள் முழு அளவில் இயங்கி வருகிறது. சிக்கலான பொது அறுவை சிகிச்சைகள் 24 மணி நேரமும் முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம், மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த, ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள அனைத்து பொதுமக்களும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையை, ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீட்டு திட்ட அலுவலகத்தை அணுகி வாங்கி வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழி இருக்கிறது என கூறினார். தற்போது வரை உத்தேசமாக நமது மாவட்டத்தில் சுமார் 40% மக்கள் மட்டுமே விரிவான காப்பீட்டு திட்ட அட்டையை பெற்றுள்ளனர். இன்னும் உத்தேசமாக சுமார் 60% மக்கள் தென்காசி மாவட்டத்தில் இந்த அட்டையை பெறவில்லை. எனவே தகுதி உள்ள பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையை பெற்று பயனடையுமாறு கண்காணிப்பாளர். ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!