சங்கரன் கோவிலுக்கு ஆலங்குளம் சுரண்டை வழியாக புதிய ரயில் பாதை; மீண்டும் வலுப்பெறும் மக்கள் கோரிக்கை..

திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் சுரண்டை வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய ரயில் பாதை; மீண்டும் வலுக்கும் மக்கள் கோரிக்கை..

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மீண்டும் திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழும்ப துவங்கியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு நகரங்கள் ஆலங்குளம் மற்றும் சுரண்டையாகும். இப்பகுதியில் இருந்து இந்திய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதை இல்லை. ஆகவே திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பொதுமக்கள், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம், வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என கடந்த 80 வருடங்களாக தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கடந்த 2009-2014 காங்கிரஸ் ஆட்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராமசுப்பு தீவிர முயற்சி எடுத்ததின் பயனாக திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு பணி செய்ய அறிவிப்பு வெளியாகி முதல் கட்ட ஆய்வு பணிகள் நடந்தன. ஆனால் ஆட்சி மாற்றத்தால் அப்பணிகள் ஆரம்ப கட்டத்தோடு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மீண்டும் திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன் கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழும்ப துவங்கியுள்ளது. தென்காசி மாவட்ட திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் இக்கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திமுக வர்த்தக அணி, சுரண்டை வியாபாரிகள் சங்கம், ஒய்எம்சிஏ, நல்ல சமாரியன் கிளப், காமராஜர் நற்பணி மன்றம், உள்ளிட்ட பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்களும் சுமார் 80 வருட கோரிக்கையை நிறைவேற்றுபவர்களையே ஆதரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதால், இக்கோரிக்கை வரும் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்