தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். பின்பு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொதுமக்கள் குறைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சிவகிரி வட்டத்தில் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்து பல்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மேலும் ஜன.31 இரவு சிவகிரியில் தங்கி (01-02-2024) அதிகாலை முதல் ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
இது பற்றிய செய்திக்குறிப்பில், சிவகிரி வட்டம் உள்ளார் ஊராட்சியில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா எனவும், ரத்தினபுரி ஊராட்சி பகுதியில் ரூ.4.40 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் விரைந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், அப்பகுதியில் தார்சாலை விரைவாக அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பளியர் இன குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சியின் மூலம் பேருந்து அமைக்கப்பட்டுள்ள நவீன கட்டண கழிப்பிடத்தையும், அப்பகுதியில் உள்ள ஜவஹர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்தும், வாசுதேவநல்லூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுகளில் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை சேகரிக்கும் பணிகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள அரசு சீர் மரபினர் பள்ளி மாணவர் விடுதியினையும், விடுதியில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் அனைத்து குறைகளும் நிறைவேற்றித் தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் போது, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. கவிதா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்தன், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் பரமசிவன், உதவி இயக்குநர் (நிர்வாகம்) கந்தசாமி, உதவி பொறியாளர் பாண்டியராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.