Home செய்திகள் நெல்லை தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை

நெல்லை தென்காசி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அமைச்சரிடம் கோரிக்கை

by mohan

தென்காசி-திருநெல்வேலி எஸ்.எச்.39 நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் அளித்த கோரிக்கை மனுவில், தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின் படி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகிய தாங்கள் திருநெல்வேலியில் முகாமிட்டு, போர்க்கால அடிப்படையில் அதிகனமழை பேரிடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தங்களின் நேரடி பார்வையில் ஆய்வு செய்து, உடனக்குடன் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு எங்களின் மனம் நிறைந்த நன்றியையும், பாராட்டுக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசியை அண்டை மாநிலமான கேரளாவோடு இணைக்கின்ற எஸ்.எச் 39 நெடுஞ்சாலை தற்போது உள்ள நிலையிலிருந்து இருபுறமும் 15அடி அகலப்படுத்துவது வரவேற்கதக்கது. தற்போது இது கட்டணமில்லா நெடுஞ்சாலையாக இருந்து வருகின்றது. 52 கிலோ மீட்டர் கொண்ட இந்த நெடுஞ்சாலையை ஒட்டி விவசாய நிலங்கள் அதிகமுள்ளது. காய்கறி சாகுபடி நிறைந்த பகுதியாக இருப்பதனால் விவசாயிகளும், விவசாய கூலிகளும், வணிகர்களும் மற்றும் தமிழகத்து தொழிலாளர்கள் அண்டை மாநிலம் செல்வதற்கும் வெகுவாக பயன்படுத்தும் முக்கிய சாலையாக இச்சாலை இருக்கின்றது.

மேலும், சாலை அகலப்படுத்தும் பணிக்கு முன்னர் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டங்கள் அனைத்திலும், இது கட்டணமில்லா நெடுஞ்சாலையாகவே மேம்படுத்தப்படுகின்றது என அரசு அதிகாரிகள் அளித்த உறுதி மொழியின் பேரில் பொதுமக்கள், கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒப்புதல் கையொப்பம் இட்டுள்ளார்கள். சுங்கச்சாவடி அமைத்து, சுங்கக்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால், அது விவசாய விளைபொருட்கள், காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது இக்கட்டணம் திணிக்கப்பட்டு, அதன் காரணமாக பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடும். பொதுமக்களின் எதிர்ப்புக்கும் ஆளாகும் நிலை உருவாகும். மேலே கூறப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் தென்காசி-திருநெல்வேலி எஸ்.எச்.39 நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com