Home செய்திகள் தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்….

தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்….

by ஆசிரியர்

தை அமாவாசையொட்டி உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய தமிழகம், மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன் இரவு முதல் குவிந்தனர்.

நேற்று அதி காலை அக்னிதீர்த்தக் கடலில் பித்துருகளுக்கு அரிசி மாவு பிண்டம், எள் வைத்து தர்ப்பணம் செய்து முன்னோருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். புனித நீராடிய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். அக்னி தீர்தக்கடலில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது. கோயில், மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. கோயில் நுழைவு வாயில்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மகோதய தினத்தில் அமாவாசை மிகவும சிறப்புக்கு உரியது என்ற ஐதீகத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானனோர் ராமேஸ்வரம் வந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதித்தது. வாகன நிறுத்துமிடத்தில் இட நெருக்கடி நிலவியதால் ராமேஸ்வரம் நுழைவு வாயிலுக்கு வெளியே 3 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். உணவகங்கள், கழிப்பிடங்கள், ஆட்டோக்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம்  அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 400 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் சேதுக்கரை, தேவிபட்டினம் கடல் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர்.

தை மாதத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகோதய அமாவாசை என்பது வியதிபாத யோகத்தில் முடிவும் அமாவாசையின் முற்பகுதி, திருவோண நட்சத்திரத்தின் நடுப்பகுதி, சூரிய உதயம் வரும் திங்கட்கிழமை அன்று சேர்ந்து வருவதால் அன்றைய நாள் மகோதய புண்ணிய கால அமாவாசை என கூறப்படுகிறது. அன்றைய தினம் மகத்தான சூரிய உதயம் என்றும், 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியது எனவும் கிடைத்ததற்கு அரிய அமாவாசையா க கருதப்படுகிறது. மகோதய அமாவாசை அன்று கடல், ஆறு, குளம் ஏதேனும் ஒன்றில் நீராடி மந்திர ஜபம், வேத வித்துகளுக்கு தானம் கொடுத்தல், காம்ய ஹோமங்கள், பித்ரு பூஜைகள், தேவதா பூஜைகள், சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றை செய்வது நற்பலன்கள் தரும்.

இந்த நாள் கோடி சூரிய கிரகணத்திற்கு சமமானது எனவும், ஸ்ம்ருதி முக்தாபலம் என்ற வேத நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தி:- முருகன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!