உத்திரகோசமங்கை கோயில் திருவிழா – ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் …

உத்திரகோசமங்கை  ஆருத்ரா தரிசனம் விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவில்  ஆருத்ரா தரிசனம் விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு  நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தலைமையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருஉத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் விழா வருகின்ற 22.12.2018 மற்றும் 23.12.2018  ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. குறிப்பாக 22.10.2018 அன்று காலை 10.30 மணியளவில்  மரகத நடராஜ பெருமானுக்கு சந்தனம் படி களைதலும் 23.10.2018 அன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளிலிருந்து அதிகளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதன்படி சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் விழாவிற்கு வருகை தரும்  பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடும் வகையில் நாளொன்றிற்கு தலா  10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தயார் நிலையில் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்கள்,பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே போதிய கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல போதிய அளவு குப்பை தொட்டிகள் அமைப்பதோடு 100 துப்புரவு பணியாளர்களை குழுக்களாக அமைத்து முறையான கால இடைவெளியில் குப்பைகளை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக பேணுவதை உறுதி செய்திட வேண்டும். போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்திமிடத்தில் நெரிசல் ஏற்படாதவாறு கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் கூட்ட நெரிசலால் பாதிக்கப்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், 530 காவல்துறை அலுவலர்கள் கொண்ட குழு தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக 3 மருத்துவ குழுக்கள், 2 ஆம்புலன்ஸ்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் திருக்கோவில் வளாகம் அருகே தயார் நிலையில் இருந்திட வேண்டும். கண்காணிப்பு பணிகளுக்காக கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை பொதுமக்கள் சிரமமின்றி காணும் வகையில் திரை அமைக்கப்படவுள்ளது.

இதுதவிர திருக்கோவிலுக்கு வருகைதரும் பொதுமக்கள் சிரமப்படாதவாறு வந்து செல்ல ஏதுவாக பகலில் வழக்கம்போல் இயங்கும் பேருந்துகளோடு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகளை இயக்கிடவும் இரவு முழுவதும் சீரான கால இடைவெளியில் பேருந்து வசதி ஏற்படுத்திட போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோவில் விழாவை சிறப்பாக நடத்திடும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் தர்மகர்த்தா ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், திவான் பழனிவேல் பாண்டியன், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் முல்லைக்கொடி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், காவல் துணை கண்காணிப்பானர்கள் (கீழக்கரை) முருகேசன், (இராமநாதபுரம்) நடராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்