Home செய்திகள்உலக செய்திகள் தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்; போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு..

தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்; போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு..

by Abubakker Sithik

தட்கல் டிக்கெட் எடுப்பதில் பொதுமக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும், ரயில்வே நிர்வாகம் தமிழ் தெரிந்த அனுபவம் வாய்ந்த நபர்களை பணியமர்த்தி மக்களின் சிரமத்தை போக்கிட வலியுறுத்தி சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் அறிக்கையில், தென்காசி மாவட்டம், இரவணசமுத்திரம் ரயில்வே ஸ்டேசனில் தட்கல் டிக்கெட் வசதி கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு இரவணசமுத்திரம் மக்கள் மட்டும் இல்லாமல் அருகிலுள்ள பொட்டல்புதூர், மாலிக்நகர், வீராசமுத்திரம், திருமலையப்பபுரம், சம்பன்குளம், மீனாட்ஷிபுரம், கோவிந்தபேரி, மந்தியூர் உள்ளிட்ட ஏராளமான கிராமத்து மாணவர்கள் வெளியூர்கள் சென்று கல்வி பயிலவும், இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலோர் சென்னை, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பலசரக்கு கடைகள் வைத்துள்ளனர். அவர்களுக்கும் உதவிகரமாக இருந்து வந்தது ரவணையின் தட்கல் முனையம்.

இதற்கு முன்னர் இங்கு பணி புரிந்த நிலைய மேலாளர் அதிகப்படியான நபர்களுக்கு டிக்கெட் அடிப்பதில் திறமையாகவும், வேகமாகவும் செயல்பட்டு அனைவரும் பயன்படும் படியும் டிக்கெட் ஏஜென்ட்களை ஓட ஓட விரட்டியும் முழுக்க முழுக்க மக்கள் பயன்பெறும் படி பணி செய்து வந்தார். அவரை தொடர்ந்து வந்த இருவரில் ஒருவர் மலையாளி ( பெண் ) மற்றொருவர் ராஜஸ்தான் மாநில இளைஞர், இவர்கள் ஆரம்பத்தில் பெரிய அளவில் தட்கல் டிக்கெட் எடுப்பதில் வேகம் காட்டவில்லை என்றாலும் பின்னர் வேகமாகவும் குறித்த நேரத்தில் டிக்கெட் எடுத்து தரவும் செய்தனர். அவர்கள் தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் பேசி புரிந்து கொண்டனர், அதனால் பயணிகளுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நல்லபடியாக சென்றது.

ஆனால் கடந்த வாரம் திடீரென அவர்களையும் மாற்றி விட்டு இரண்டு புதிய வட மாநில இளைஞர்களை பணியில் அமர வைத்துள்ளது ரயில்வே நிர்வாகம். புதியவர்கள் தட்கல் டிக்கெட் அடிப்பதில் அனுபவமற்றவர்களாக இருக்கிறார்கள். சரி பேசுவது தான் புரியாது, ஆங்கிலத்தில் பேசுவதை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. டிக்கெட் படிவத்தில் ஆங்கிலத்தில் எழுதி கொடுக்கும் பெயரை கூட அவர்களுக்கு டைப் செய்ய தெரிவது இல்லை, Murugan என்ற பெயரை டைப் செய்வதற்கு கூட ஒருவர் M என்று சொல்லி அடுத்து U அடுத்து R என்ற சொல்லி கொடுத்து எழுத்துகளை தேடி பிடிப்பதற்குள் தட்கல் டிக்கெட்கள் தீர்ந்து விடுகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாகவே இரவணசமுத்திரத்தில் தட்கல் புக் செய்வதில் சிரமம் அடைந்து வருகின்றனர் பொது மக்கள்.

இரயில்வே நிர்வாகத்தை பொறுத்த வரை இங்கு புக் செய்யபடவில்லை என்றாலும் டிக்கெட்கள் எங்கோ புக்கிங் ஆகி விடும் என்பதால் இதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஆனால் இங்கு இருந்து வெளியூரில் வேலை பார்க்கும் மக்களுக்கும், கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் இது மிக பெரிய சிரமமான ஒன்றாகும். எனவே இதனை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டு, உடனடியாக, தமிழ் தெரிந்த, அனுபவம் உள்ள நபர்களை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையேல் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அனைத்து கட்சிகள், பொதுமக்களையும் இணைத்து மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!