தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கு 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி காலை 11 மணி முதல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வடசென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளில் சிறு சிறு பிரச்சினைகள் எழுந்தன.
இறுதியாக, அனைத்து மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
இறுதி நிலவரப்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
புதுச்சேரியில் 36 மனுக்கள் ஏற்பு: புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் பாஜக நமச்சிவாயம், காங்கிரஸ் வைத்திலிங்கம், அதிமுக தமிழ்வேந்தன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நேற்று (மார்ச் 29) புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத அரசியல் கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.
பிரச்சாரம் தீவிரம்: வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பிரதானமாக திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் தொகுதி வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
You must be logged in to post a comment.