Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை இராதாபுரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; பிப் 01 இன்று துவங்குகிறது..

நெல்லை இராதாபுரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; பிப் 01 இன்று துவங்குகிறது..

by Abubakker Sithik

நெல்லையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் பிப். 01 இன்று துவங்கி பிப். 02 நாளை வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, மக்களைத் தேடி பல்வேறு அரசு திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய அரசுத் துறை அலுவலர்கள் மக்களைத் தேடி வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் மாதம் ஒரு முறை முகாம் நடைபெறும். அதில் மாவட்ட ஆட்சித்தலைவருடன் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்குபெறுவர். கள ஆய்வுப்பணிகள் முதல் நாள் காலை 9.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 மணி வரை நடைபெறும். அந்த தாலுகாவில் நடைபெற்று வரும் அனைத்துதுறை பணிகளையும் ஆய்வு செய்வார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் முதற்கட்டமாக இராதாபுரம் தாலுகாவில் 01-02-2024, 02-02-2024 தேதிகளில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), இணை இயக்குநர் (வேளாண்மை), இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை), இணை இயக்குநர் (சுகாதார துறை), துணை இயக்குநர் (பொது சுகாதாரம்), கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை), செயற் பொறியாளர் (குடிநீர் மற்றும் வடிகால்), மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் இதர மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டப்பணிகளை கள ஆய்வு செய்ய உள்ளார்கள். மேலும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் இராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com