உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து 21.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற முகாமில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டத்தில் ரூ.7 கோடியே 68 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டினையும், ரூ.1 கோடியே 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மைய நூலகத்தினையும், சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பைகளை சலித்து எடுக்கும் பணிகளையும், கழிவு நீர் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் மலக்கழிவினை அகற்றி அந்நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு தேவையான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அரசு மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை கேட்டறிந்தும், ரூ. 9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினையும், கக்கன் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையினையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கினையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் இ-சேவை மையத்தினையும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தினையும், சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 42 இலட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கரிவலம் வந்தநல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கட்டப்பட்டு வரும் கழிப்பறைகளை ஆய்வு செய்து அரசு பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி அனைத்து மாணவ, மாணவியர்களும் முழு தேர்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சங்கரன்கோவில் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆண்டணி ஃபெர்னான்டோ, சங்கரன் கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபா நாயகம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவம், சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாண ராமசுப்பிரமணியன், ராதா திருமலை, மாவட்ட மேலாளர் (மின்ஆளுமை) துர்கா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.