பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி* *ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு..

veஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கிட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவைக் கண்டித்து ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுதோறும் கறுப்புக்கொடி ஏற்றிட முடிவு செய்துள்ளோம்என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவு சரியானதல்ல. ஆலைக்கு சார்பாகவே இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி ஒருசார்பாகவே தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது எனக் கூறி தமிழக அரசின் அரசாணையை பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது கண்டனத்துக்கு உரியது.

தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் மறைமுகமாகக் கூட்டு வைத்துக்கொண்டு நீதிமன்றத்தின் மூலமாக ஆலையை மீண்டும் திறந்துவிடலாம் எனத் திட்டமிட்டே வேலைகளைச் செய்து வருகிறது. தருண் அகர்வாலின் ஆய்வுக் குழுவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் மக்களின் நிலைப்பாட்டையும் கருத்துகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஆலைக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பாயத்தின் ஆய்வறிக்கையும், பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.தூத்துக்குடியில் தற்போது அவசரநிலை போன்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையும் உளவுத்துறையினரும் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் பதற்ற நிலையிலேயே உள்ளனர். இதைக் கண்டித்தும், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பைக் கண்டித்தும் வரும் புதன்கிழமை ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுதோறும் கறுப்புக்கொடி ஏற்றுவது என முடிவுசெய்துள்ளோம்.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சிறப்புச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி முதலமைச்சருக்கு கோரிக்கையைத் தெரிவிக்கும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கு வணிகர் சங்கங்கள், அனைத்து அமைப்புகள், ஆட்டோ, வேன் தொழிலாளர்கள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து சிறப்புச் சட்டம் இயற்றிட வலியுறுத்திட வேண்டும்என்றனர்.

தூத்துக்குடி நிருபர்:- அஹமது ஜான்..